நகைக்கடை அதிபர் ரூ.1,650 கோடி மோசடி செய்த வழக்கு: போலீஸ் ஐ.ஜி. உள்பட 9 அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை


நகைக்கடை அதிபர் ரூ.1,650 கோடி மோசடி செய்த வழக்கு: போலீஸ் ஐ.ஜி. உள்பட 9 அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை
x
தினத்தந்தி 9 Nov 2019 12:00 AM GMT (Updated: 8 Nov 2019 10:12 PM GMT)

நகைக்கடை அதிபர் ரூ.1,650 கோடி மோசடி செய்த வழக்கில் போலீஸ் ஐ.ஜி. உள்பட 9 அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். பெங்களூரு உள்பட 15 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

பெங்களூரு, 

பெங்களூரு சிவாஜிநகரில் நகைக்கடை நடத்தி வந்தவர் மன்சூர்கான். இவருக்கு கர்நாடகத்தில் பல இடங்களில் நகைக்கடைகள் உள்ளன. தனது நகைக்கடைகளில் முதலீடு செய்பவர்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி பணம் வசூலித்திருந்தார். அவ்வாறு பொதுமக்களிடம் வசூலித்த ரூ.1,650 கோடியை திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு மன்சூர்கான் துபாயில் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து கமர்சியல் தெரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரிக்க அரசு உத்தரவிட்டது.

அதே நேரத்தில் அமலாக்கத்துறையும் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. துபாயில் இருந்து பெங்களூரு திரும்பிய மன்சூர்கானை அமலாக்கத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். மேலும் மன்சூர்கான் நகைக்கடையில் முறைகேடுகள் நடைபெறவில்லை என்று கூறி அரசுக்கு தவறான அறிக்கை அளித்ததுடன், மன்சூர்கானிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக பெங்களூரு மாவட்ட கலெக்டராக இருந்த விஜய்சங்கர் உள்பட சில அரசு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரியான விஜய்சங்கர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு அமைந்ததும் மன்சூர்கான் நகைக்கடையில் நடந்த மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மன்சூர்கானை காவலில் எடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதே நேரத்தில் கோர்ட்டிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையில், மன்சூர்கானிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நகைக்கடையில் நடந்த மோசடியில் அரசு அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மன்சூர்கான் நகைக்கடையில் நடந்த மோசடி தொடர்பாக போலீஸ் ஐ.ஜி, ஐ.பி.எஸ். அதிகாரிகள், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட 9 பேரின் வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அதாவது போலீஸ் ஐ.ஜி.யான ஹேமந்த் நிம்பால்கர், ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஸ்ரீதர், அஜய் ஹிலோரி, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்சங்கர், போலீஸ் அதிகாரிகள் ரமேஷ், கவுரி சங்கர், நாகராஜ், அரசு அதிகாரிகள் மஞ்சுநாத் மற்றும் குமார் ஆகிய 9 பேரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நேற்று காலையில் இருந்து மாலை வரை இந்த சோதனை நடைபெற்றது. பெங்களூருவில் 11 இடங்களிலும், மண்டியா, ராமநகர் உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் ஐ.பி.எஸ். அதிகாரிகளான ஹேமந்த் நிம்பால்கர், ஸ்ரீதர், அஜய் ஹிலோரி உள்ளிட்டோர் நகைக்கடை மோசடி குறித்து முதலில் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும், மன்சூர்கானுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சோதனையின் போது மன்சூர்கான் நகைக்கடைகளில் நடந்த மோசடி தொடர்பான ஆவணங்கள் சில அதிகாரிகளின் வீடுகளில் சிக்கியதாகவும், அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. நடத்திய சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story