எர்ணாவூர் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க கோரி கையெழுத்து இயக்கம்


எர்ணாவூர் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க கோரி கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 8 Nov 2019 10:16 PM GMT (Updated: 8 Nov 2019 10:16 PM GMT)

எர்ணாவூர் பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது உயிர் பலி ஏற்படுவதை தடுக்க ரெயில்வே சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

திருவொற்றியூர், 

திருவொற்றியூர் மேற்கு பகுதிகளான சத்யமூர்த்தி நகர், சண்முகபுரம், ராமநாதபுரம், எர்ணாவூர், முல்லைநகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட 25 நகர்களில் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள், எர்ணாவூர் பகுதியில் இருந்து சுடுகாட்டிற்கோ அல்லது எண்ணூர் கடற்கரை சாலை பகுதியில் உள்ள கிராமங்களுக்கோ செல்லவேண்டும் என்றால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று எர்ணாவூர் மேம்பாலம் அல்லது கத்திவாக்கம் மேம்பாலத்தின் மீது ஏறி சுற்றித்தான் செல்லவேண்டிய இடத்துக்கு செல்ல முடியும்.

இதனால் எர்ணாவூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் ஆபத்தான முறையில் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர்.

எர்ணாவூர் பகுதியில் வசிக்கும் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு இறுதிச்சடங்குகளை செய்ய சுடுகாடு செல்ல வேண்டுமானால் இறந்தவர்களின் உடலை எர்ணாவூர் பஸ் நிலையம் வரை இறுதி ஊர்வல வண்டியில் கொண்டுவந்து, அங்கிருந்து இறந்தவர்களின் உடலை தங்கள் தோளில் சுமந்தபடி ரெயில்வே தண்டவாளத்தை கடந்து சுடுகாட்டுக்கு எடுத்துச்சென்று இறுதிச் சடங்குகளை செய்து வருகின்றனர்.

அதேபோன்று எண்ணூர் சுனாமி குடியிருப்புகளில் வசிக்கும் பள்ளி மாணவ-மாணவிகள் எர்ணாவூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி உள்பட எர்ணாவூரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு செல்ல இந்த ரெயில்வே தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து சென்று வருகின்றனர்.

எர்ணாவூரில் இருந்து அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் சுனாமி குடியிருப்பு பகுதிக்குதான் வரவேண்டும். இதனால் கர்ப்பிணி பெண்களும் இந்த தண்டவாளத்தை தாண்டிதான் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.

இவ்வாறு தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்றுவரும் இந்த ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும்போது அடிக்கடி ரெயிலில் அடிபட்டு உயிர் பலி ஏற்படுகிறது.

இதை தடுக்க ரெயில்வே நிர்வாகம் சார்பில் சுவர் கட்டப்பட்டது. ஆனால் அதனை பொதுமக்கள் தடுத்து நிறுத்திவிட்டனர். அந்த பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதையும் மீறித்தான் பொதுமக்கள் தண்ட வாளத்தை கடந்து சென்று வருகின்றனர்.

எனவே ஆயிரக்கணக்கான மக்களின் தேவையை மனதில் கொண்டு எர்ணாவூர் பஸ் நிலையம் அருகே ரெயில்வே நிர்வாகம் சார்பிலோ அல்லது மாநகராட்சி சார்பிலோ பொதுமக்கள் நடைபாதை வசதியுடன் கூடிய ரெயில்வே சுரங்கப்பாதை அமைத்து தரவேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இணைந்து டி.ஆறுமுகம் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

இதில் தி.மு.க. மாநில சட்டத்துறை இணைச்செயலாளர் கண்ணதாசன், முன்னாள் நகராட்சி தலைவர் ஜெயராமன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அங்கிருந்த பேனரில் அனைவரும் கையெழுத்திட்டனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story