மாஞ்சாநூலால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க விழிப்புணர்வு: சிறுவர்கள் காற்றாடி பறக்கவிட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை - போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை


மாஞ்சாநூலால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க விழிப்புணர்வு: சிறுவர்கள் காற்றாடி பறக்கவிட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை - போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 Nov 2019 10:43 PM GMT (Updated: 8 Nov 2019 10:43 PM GMT)

மாஞ்சாநூலால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற போலீஸ் துணை கமிஷனர், சிறுவர்கள் காற்றாடி பறக்கவிட்டால் அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

திருவொற்றியூர், 

மாஞ்சாநூல் பலரின் உயிரை பறித்து உள்ளதால் சென்னையில் மாஞ்சாநூல் காற்றாடி பறக்கவிட போலீசார் தடை விதித்து உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் பெற்றோருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற கோபால் என்பவருடைய 3 வயது குழந்தை அபினேஷ் சரவ், மாஞ்சாநூல் கழுத்தை அறுத்து பரிதாபமாக இறந்தது.

நேற்றுமுன்தினம் கொடுங்கையூரை சேர்ந்த ராஜசேகரன்(25) என்பவர் மோட்டார்சைக்கிளில் சென்றபோது மாஞ்சாநூல் கழுத்தை அறுத்ததில் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இந்தநிலையில், மாஞ்சாநூல் காற்றாடி பறக்க விடுவதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலைய சமூக நலக்கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். இதில் வியாபாரிகள் சங்கத்தினர், பொதுமக்கள், சிறுவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் மாஞ்சாநூல் காற்றாடி பறக்கவிடுவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் மாஞ்சா நூலால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து விளக்கிய துணை கமிஷனர் சுப்புலட்சுமி, மேலும் கூறியதாவது:-

கடைகளில் மாஞ்சாநூல் விற்க கூடாது. அவற்றை எங்கும் பதுக்கியும் வைக்ககூடாது. தடையை மீறி காற்றாடி விற்கும் வியாபாரிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு கைது நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவர்கள் மொட்டை மாடிக்கு சென்று காற்றாடி பறக்கவிடக்கூடாது.

தங்கள் பிள்ளைகள் காற்றாடி பறக்கவிடாமல் பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அதையும் மீறி சிறுவர்கள் காற்றாடி பறக்கவிட்டால் அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அதேபோல் புளியந்தோப்பு கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம் அருகே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று மாஞ்சாநூல் கயிறால் ஏற்படும் மரணங்களை தடுக்க பொதுமக்களிடம் ஒலிபெருக்கி மூலமும், ‘பட்டம் விட்டால் சட்டம் பாயும்’ என்ற எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அந்த துண்டு பிரசுரத்தில், “பட்டம் விட்டால் சட்டம் பாயும். பிள்ளைகள் பட்டம் விடாமல் தடுப்பது பெற்றோரின் கடமை. பட்டம் விடுவதால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. வாலிபர்கள் பட்டம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவர்கள் பட்டம் விட்டால் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்பது உள்ளிட்ட எச்சரிக்கை வாசகங்கள் அதில் இடம்பெற்று இருந்தன.

Next Story