குமரி மாவட்டத்தில் மழை: பேச்சிப்பாறை– பெருஞ்சாணி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு


குமரி மாவட்டத்தில் மழை: பேச்சிப்பாறை– பெருஞ்சாணி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 10 Nov 2019 4:30 AM IST (Updated: 9 Nov 2019 8:12 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட பகுதிகளில் மழை பெய்ததையொட்டி, பேச்சிப்பாறை– பெருஞ்சாணி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக மழை அவ்வளவாக இல்லை. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் வெயிலும், இடையிடையே வானம் மேகமூட்டத்துடனும், சில நேரங்களில் மழை தூறல் விழுவதுமாக இருந்தது.

மாவட்ட அணைப்பகுதிகளில் மழை பெய்துள்ளது. நேற்று மதியத்துக்கு மேல் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் இடி– மின்னலுடன் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக சிற்றார்–1 அணைப்பகுதியில் 94.6 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:–

பேச்சிப்பாறை– 65, பெருஞ்சாணி– 36.6, புத்தன் அணை– 35.2, சிற்றார் 2– 8, மாம்பழத்துறையாறு– 10.4, பாலமோர்– 10.4, முக்கடல் அணை– 1.6, சுருளக்கோடு– 15, அடையாமடை– 3 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

இந்த மழையைத்தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 376 கன அடி தண்ணீர் வந்தது. அது நேற்று காலை நிலவரப்படி 1,175 கன அடியாக அதிகரித்தது.

இதே போல் நேற்று முன்தினம் 564 கன அடி தண்ணீர் வந்த பெருஞ்சாணி அணைக்கு நேற்று 981 கன அடி தண்ணீர் வந்தது. சிற்றார்–1 அணைக்கு 315 கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 12 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.

42 அடியை நெருங்குகிறது

சிற்றார்–1 அணையில் இருந்து 273 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டது. பெருஞ்சாணி அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணையில் இருந்து 12 கன அடி தண்ணீர் உபரியாக திறந்து விடப்படுகிறது.  

48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று நிலவரப்படி இந்த அணையின் நீர்மட்டம் 41.35 அடியாக இருந்தது. இந்த அணையின் நீர்மட்டம் 42 அடியை நெருங்கியதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவது வழக்கம். எனவே இன்னும் அரை அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்தால் அணையின் நீர்மட்டம் 42 அடியாக உயரும். அதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மலையோர பகுதியில் பெய்து வரும் கனமழையால் திற்பரப்பு அருவியில் அதிக அளவு வெள்ளம் கொட்டுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Next Story