திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 9 Nov 2019 11:15 PM GMT (Updated: 2019-11-09T21:47:34+05:30)

திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம நபர் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். அடையாளம் தெரியாமல் இருக்க கண்காணிப்பு கேமராவில் கருப்பு மையை பூசி மர்ம நபர் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

துவாக்குடி,

திருச்சி அருகே மத்திய அரசின் பாதுகாப்பு படை கலன் தொழிற்சாலைகளில் ஒன்றான துப்பாக்கி தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை ரவுண்டானா பகுதியில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் வசதிக்காக பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தை கல்லால் அடித்து உடைத்துள்ளார். அப்போது, சத்தம் கேட்டு அருகில் பஸ்நிலையத்தில் படுத்து இருந்தவர்கள், சத்தம் போட்டுக்கொண்டு ஓடி வரவே, அந்த மர்ம நபர், தான் கொண்டு வந்த கல்லையும், அத்துடன் மிளகாய் பொடியையும் ஏ.டி.எம். மையத்தின் வாசலில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

மிளகாய் பொடி

இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் இதுகுறித்து நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே திருவெறும்பூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்ரே தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தையும், அந்த அறையையும் பார்வையிட்டனர்.

அப்போது, ஏ.டி.எம். மையத்தின் முன், மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. எந்திரத்தை உடைக்க பயன்படுத்திய கல்லும் அங்கு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, எந்திரத்தின் கீழ் உள்ள பெட்டியின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதன் உள்பகுதியில் உள்ள கதவை உடைக்க முயற்சித்துள்ளதும் தெரியவந்தது.

கேமராவில் கருப்பு மை

அத்துடன் தன்னை போலீசார் அடையாளம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் அந்த மர்ம நபர் கருப்பு நிற மையை பூசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த மர்ம நபர் கருப்பு நிற கோட் மற்றும் முகத்தில் ‘மங்கி குல்லா’ அணிந்து வந்து இருப்பது தெரியவந்தது.

அத்துடன், ஏ.டி.எம். எந்திரத்தை அந்த மர்ம நபர் உடைக்கும் போது அலாரம் அடிக்கவில்லை. இதனால் மர்ம நபர் அலாரத்தை துண்டித்துவிட்டு கொள்ளையடிக்க முயன்றாரா? அல்லது, அது ஏற்கனவே பழுதாகி இருந்ததா? என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு கொள்ளையன் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்பநாய் பப்பி வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அது ஏ.டி.எம். மையத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது.

வலைவீச்சு

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே பெல் தொழிற்சாலை கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளை வழக்கில் இதுவரை துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வரும் நிலையில் துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது போலீசாருக்கு பெரும் சவாலையும், தலைவலியையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story