கண்ணமங்கலம் அருகே, மேல்நகர் ரெயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கக்கூடாது - அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை


கண்ணமங்கலம் அருகே, மேல்நகர் ரெயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கக்கூடாது - அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Nov 2019 10:15 PM GMT (Updated: 9 Nov 2019 4:42 PM GMT)

கண்ணமங்கலம் அருகே மேல்நகர் ரெயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கக்கூடாது என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.

கண்ணமங்கலம், 

கண்ணமங்கலம் அருகே உள்ள மேல்நகர் கிராமம் வழியாக விழுப்புரம்-காட்பாடி ரெயில்வே பாதையில் ரெயில்வே கேட் உள்ளது. தற்போது ஆட்கள் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இப்பாதை குண்ணத்தூர் பகுதியில் ஆரணி ரோடும், அய்யம்பாளையம் கூட்ரோட்டில் வேலூர் ரோடும் இணைகிறது.

இதனால் இப்பகுதியில் உள்ள மேல்நகர், கீழ்நகர், அய்யம்பாளையம், வி.வி.தாங்கல், பாளைய ஏகாம்பரநல்லூர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேல்நகர் ரெயில்வே கேட்டில் ரெயில்வே துறை மூலம் சுரங்கப்பாதை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று மேல்நகர் கிராமத்திற்கு வந்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், மேல்நகர் ரெயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கக்கூடாது. இப்பகுதியில் வழிபாட்டு தலங்கள் உள்ளன. சுரங்கப்பாதை அமைப்பதற்கு பதிலாக ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பின்னர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், விழுப்புரம் ரெயில்வே துறை அதிகாரிகளிடம் போன் மூலம் பேசி மேல்நகர் ரெயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு பதிலாக, மேம்பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

Next Story