அயோத்தி வழக்கில் தீர்ப்பு: வழிபாட்டு தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ரெயில்களில் அதிரடி சோதனை


அயோத்தி வழக்கில் தீர்ப்பு: வழிபாட்டு தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ரெயில்களில் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 9 Nov 2019 11:00 PM GMT (Updated: 9 Nov 2019 5:47 PM GMT)

அயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலியாக வழிபாட்டு தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரெயில்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

தஞ்சாவூர்,

அயோத்தி வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது. இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கரில் மாற்று நிலம் வழங்க வேண்டும் எனவும், அயோத்தியில் ராமர்கோவில் கட்ட அனுமதி அளித்தும் தீர்ப்பு கூறப்பட்டது. இந்த தீர்ப்பினால் தஞ்சை மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மேற்பார்வையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை போலீசார், அதிரடிப்படை போலீசார், ஊர்க்காவல் படையினர் என 1,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தஞ்சை பெரியகோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அனைவரையும் போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் கொண்டு வந்த பொருட்களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

பள்ளிவாசல்

தஞ்சை காந்திஜிசாலை இர்வீன்பாலம் அருகே உள்ள பள்ளிவாசல் முன்பு 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் கோவில்கள், பள்ளிவாசல்கள், மசூதிகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பாலங்கள், பஸ் நிறுத்தங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தஞ்சை ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் இணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். மயிலாடுதுறையில் இருந்து கோவையை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளிட்ட ரெயில்கள் தஞ்சை ரெயில் நிலையத்தில் நின்றபோது ரெயில்களில் போலீசார் ஏறி பயணிகளின் பொருட்களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். அதேபோல் பஸ்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனை சாவடி

மாவட்டத்தில் 6 இடங்களில் சோதனை சாவடி உள்ளது. அந்த வழியாக சென்ற வாகனங்களில் சந்தேகப்படும் வாகனங்களை போலீசார் வழிமறித்து, ஆயுதங்கள் ஏதும் இருக்கிறதா? என பார்வையிட்டனர். மேலும் தனித்தனி குழுவாக அமைக்கப்பட்டு, மோட்டார் சைக்கிள், ஜீப், வேன் போன்றவற்றின் மூலம் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் யாராவது வாங்கி செல்கிறார்களா? எனவும் கண்காணிக்கப்பட்டது.

வாட்ஸ்அப், பேஸ்புக் பதிவுகளை கண்காணிக்க தனி குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்கள் அருகே சந்தேகப்படும்படி சென்ற நபர்களை அழைத்து விசாரணை நடத்தியதுடன் அவர்களது முகவரியையும் வாங்கி கொண்டனர். தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் வெளிநபர்களின் நடமாட்டம் இருக்கிறதா? என போலீசார் கண்காணித்தனர். தஞ்சை மாவட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதி நிலவியது.

Next Story