குன்னூர் அருகே, மூதாட்டி வீட்டில் நகை-பணம் திருடியவர் கைது


குன்னூர் அருகே, மூதாட்டி வீட்டில் நகை-பணம் திருடியவர் கைது
x
தினத்தந்தி 9 Nov 2019 10:45 PM GMT (Updated: 9 Nov 2019 6:34 PM GMT)

குன்னூர் அருகே மூதாட்டி வீட்டில் நகை-பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குன்னூர்,

குன்னூர் அருகே உள்ள பெட்டட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி மாசியம்மாள்(வயது 60). தேயிலை தோட்ட தொழிலாளி. செல்வராஜ் ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் மாசியம்மாள் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையில் கடந்த மாதம் 22-ந் தேதி காலையில் மாசியம்மாள் வழக்கம்போல் தேயிலை தோட்டத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், பீரோவில் உள்ள ரகசிய அறையை திறந்து பார்த்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமி திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

உடனே அருவங்காடு போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது கழிவறையின் ஜன்னல் கம்பியை அறுத்து, வீட்டுக்குள் மர்ம ஆசாமி நுழைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அதே பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒருவர் சுற்றித்திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர், குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளியை சேர்ந்த குமார்(48) என்பதும், மாசியம்மாள் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 29 பவுன் தங்க நகை மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story