இந்த ஆண்டில் 2 ஆயிரத்து 333 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தனர் - கலெக்டர் தகவல்


இந்த ஆண்டில் 2 ஆயிரத்து 333 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தனர் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 9 Nov 2019 10:30 PM GMT (Updated: 9 Nov 2019 6:34 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 2 ஆயிரத்து 333 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து உள்ளனர் என்று கலெக்டர் தெரிவித்தார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் 6 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், பூண்டு போன்ற பயிர்களும், கூடலூர் பகுதியில் இஞ்சி, வாழை மற்றும் மரவள்ளி பயிர்களும் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேற்கண்ட பயிர்களுக்கு அதிக முதலீடு தேவைப்படுவதால் எதிர்பாராத விதமாக ஏற்படும் மகசூல் பாதிப்புகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். மகசூல் இழப்பீட்டில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் நீலகிரியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை உருளைக்கிழங்கு, மரவள்ளி மற்றும் வாழை பயிர்களுக்கு மட்டும் பயிர் காப்பீடு செய்யப்பட்டு வந்த நிலையில். மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை எடுத்த முயற்சியால் நடப்பாண்டில் கேரட், முட்டைக்கோஸ், இஞ்சி, பூண்டு பயிர்களுக்கும் பயிர் காப்பீடு செய்வதற்கான உத்தரவு பெறப்பட்டு பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு காரிப்பருவத்தில் 2 ஆயிரத்து 333 விவசாயிகள் 936 ஹெக்டர் பரப்பில் பயிர் காப்பீடு செய்து உள்ளனர்.

சமீபத்தில் ஊட்டி அருகே பாலாடா பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த விவசாயிகள், மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நாள் வரை பயிர் காப்பீடு செய்துள்ள 16 விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனம் மூலம் ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 319 வழங்கப்பட்டு உள்ளது.

மீதம் உள்ள விவசாயிகளுக்கு பயிர் அறுவடை பரிசோதனையின் மூலம் பெறப்படும் மகசூலை கணக்கில் கொண்டு இழப்பீடு தொகை வழங்கப்பட உள்ளது. இதுபோன்ற எதிர்பாராத விதமாக ஏற்படும் மழை வெள்ளம், வறட்சி, புயல், பனி, ஆலங்கட்டி மழை போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயிகள் தங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பில் இருந்து மீண்டு வர காப்பீடு திட்டம் உதவியாக உள்ளது.

மேலும் மழை வெள்ள பாதிப்பினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 362 விவசாயிகளுக்கு வழங்க மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியில் இருந்து காய்கறி பயிர்களுக்கு 1 ஹெக்டேர் பரப்பிற்கு ரூ.13 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ.58 லட்சம் நீலகிரி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே நீலகிரி மாவட்ட மக்கள் அனைவரும் எதிர்பாராதவிதமாக நிகழும் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தின் அரசாணை ராபி பருவத்திற்கு வரும் பட்சத்தில் உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், பூண்டு, இஞ்சி, வாழை ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story