அயோத்தி வழக்கில் தீர்ப்பு எதிரொலி: கரூரில் பஸ்-ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


அயோத்தி வழக்கில் தீர்ப்பு எதிரொலி: கரூரில் பஸ்-ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 9 Nov 2019 11:00 PM GMT (Updated: 9 Nov 2019 7:43 PM GMT)

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, கரூரில் பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கரூர்,

அயோத்தி வழக்கில் நேற்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பால் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் இருப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பை பலப்படுத்தியது. கரூர் பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் அறிவுறுத்தலின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கரூர் பஸ் நிலையம், சினிமா தியேட்டர்கள், பசுபதிபாளையம், திருமாநிலையூர், அமராவதி ஆற்று பாலங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு கருதி வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி, புருடர் (இரும்பு கம்பி) உள்ளிட்டவற்றின் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். கரூர் மனோகரா கார்னரில் வஜ்ரா வாகனம் கொண்டு வந்து தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.

கோவில், பள்ளிவாசல்கள்

மேலும் தீர்ப்புக்கு ஆதரவாக யாரும் இனிப்பு வழங்குகின்றனரா? அல்லது தீர்ப்பை எதிர்த்து யாரும் போராட்டம் நடத்துகின்றனரா? என்பதை பாதுகாப்பு பணியிலிருந்து போலீசார் கண்காணித்தனர். மேலும் சந்தேக நபர்களை பிடித்து விசாரித்த பின்னரே அனுப்பி வைத்தனர். கோவில்கள், பள்ளி வாசல்கள் உள்ளிட்டவற்றிலும் பாதுகாப்பு கருதி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எனினும் அங்கு வழக்கம் போல் வழிபாடு, தொழுகை ஆகியவை நடந்தன. மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா உள்ளிட்டோர் போலீசாருடன் சென்று கரூர் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலான செயல்கள் ஏதும் நடக்கின்றனவா? என பார்வையிட்டு பாதுகாப்பினை பலப்படுத்தினர்.

கரூர் ரெயில் நிலையம் உள்பட மாவட்டத்திலுள்ள பல்வேறு ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே பாதுகாப்பு படை, ரெயில்வே போலீசார், மாவட்ட போலீசார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். ரெயில் நிலைய நுழைவு வாயிலில் நவீன ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

பாதிப்பில்லை

பஸ்கள் உள்ளிட்டவை வழக்கம் போல் ஓடியதாலும், கடைகள் திறந்திருந்ததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. கரூர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மேற்பார்வையில், 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 22 இன்ஸ்பெக்டர்கள், 110 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், ஊர்காவல் படையினர் என ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகளவில் வசித்து வருவதால் அங்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சாதாரண உடையிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அங்குள்ள பள்ளிவாசல்களின் நுழைவு வாயிலில் போலீசார் அமர்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குளித்தலை

இதேபோல் குளித்தலை சுங்கவாயில், பஸ்நிலையம், பெரியபாலம், ரெயில்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதுபோல் ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டிருந்தனர். குளித்தலை பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அனைத்தும் வழக்கம்போலவே செயல்பட்டது.


Next Story