திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் 5 ஆயிரம் போலீசார் குவிப்பு ரெயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு


திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் 5 ஆயிரம் போலீசார் குவிப்பு ரெயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
x
தினத்தந்தி 10 Nov 2019 4:30 AM IST (Updated: 10 Nov 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தி வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டதையொட்டி திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரெயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருச்சி,

அயோத்தி வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானதையொட்டி திருச்சி மாநகர பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், போலீஸ் துணை கமிஷனர்கள் மயில்வாகனன், நிஷா ஆகியோர் மேற்பார்வையில் 1,000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ரோந்து வாகனங்கள் மூலம் ஆங்காங்கே போலீசார் ரோந்து சென்றபடி இருந்தனர்.

கோவில்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் சென்ற பக்தர்களின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது. மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில், நத்தஹர்வலி தர்கா உள்பட பல்வேறு இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். முக்கிய சந்திப்புகளான சிந்தாமணி அண்ணாசிலை பகுதி, பாலக்கரை ஜங்ஷன், மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார்சிலை, புத்தூர் நான்குரோடு உள்ளிட்ட இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். ஆங்காங்கே தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கலவரத்தை கட்டுப்படுத்த பயன்படும் வருண் வாகனம் மத்திய பஸ் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

பலத்த பாதுகாப்பு

திருச்சி மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் உள்பட 25-க்கும் மேற்பட்ட கோவில்கள், துவாக்குடி, துவரங்குறிச்சி, இனாம்குளத்தூர், பெட்டவாய்த்தலை, மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள், மசூதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில், 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அயோத்தி வழக்கு தீர்ப்பு வெளியானதையொட்டி, திருச்சி மத்திய மண்டலத்தில் பாதுகாப்பு பணிகளை கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் மேற்பார்வையில், போலீஸ் ஐ.ஜி.சாரங்கன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் கண்காணித்து வந்தனர். மேலும், அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் பாதுகாப்பு பணியை கண்காணித்து வந்தனர்.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் ரெயில் நிலைய நடைமேடைகளிலும், நுழைவுவாயில்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் ரெயில்களிலும் தீவிர சோதனை நடத்தினர். மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது. ரெயில் நிலைய வளாகத்தில் மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் ரெயில் நிலையத்திற்குள் வந்த வாகனங்களை சோதனை நடத்தினர். ரெயில் நிலையத்தின் முன்பு தீயணைப்பு வாகனமும், ஆம்புலன்சும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. ரெயில்வே பாலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தண்டவாளங்களில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.

5 ஆயிரம் போலீசார்

இதேபோல் திருச்சி விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனைக்குட்படுத்தினர். விமானநிலைய வளாகத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினருடன் இணைந்து விமானநிலைய போலீசாரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

திருச்சி சரகத்துக்குட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 4 ஆயிரம் போலீசாரும், திருச்சி மாநகரில் 1,000 போலீசாரும் என மொத்தம் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story