சேந்தமங்கலத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்தது கனமழை குடியிருப்பு, வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்தது


சேந்தமங்கலத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்தது கனமழை குடியிருப்பு, வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 9 Nov 2019 11:00 PM GMT (Updated: 2019-11-10T02:13:50+05:30)

சேந்தமங்கலத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் குடியிருப்புகள், வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. சேந்தமங்கலம் பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரை விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் அதிகாலை நேரத்தில் அப்பகுதி பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் மிகுந்த சிரமப்பட்டனர்.

சேந்தங்கலம் பேரூராட்சி 15-வது வார்டு ஜங்களாபுரம் பகுதி தாழ்வாக இருப்பதால் பொட்டணம், பச்சுடையாம்பட்டி, நைனாமலை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மழைநீர் அங்குள்ள வயல்வெளிகளில் வந்து நிரம்பியது. இதனால் அங்குள்ள சோளம், பருத்தி விளைந்த வயல்கள் நீரில் மூழ்கின. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே வாய்க்காலில் வெள்ளமாக மழைநீர் ஓடியது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளாகவே காட்சி அளித்தது.

தம்பதி தவிப்பு

இதேபோல அங்குள்ள நரிக்குறவர் காலனியை மழைநீர் சூழ்ந்ததால் அனைத்து குடியிருப்புகளிலும் இருந்து மக்கள் வெளியேற சிரமப்பட்டனர். அங்கு வசித்து 2 கால்களை இழந்த சின்னபிள்ளை (வயது 65), அவரது கணவர் முத்து (75) ஆகியோர் வெளியேற முடியாமல் மழைநீருக்கு நடுவே கட்டிலில் தவித்தபடி அமர்ந்து இருந்தனர். மேலும் அங்குள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அனைவரும் விடிய, விடிய தூங்காமல் குளிரில் தவித்தனர்.

இந்த கனமழையால் நிரம்பிய கிணறு மற்றும் வயல்வெளியில் இருந்து வெளியேறிய தண்ணீர் சேந்தமங்கலம் - ராசிபுரம் மெயின் ரோட்டிலும், ஜங்களாபுரம் சாலையிலும் வெள்ளமாக ஓடியது. சில வீடுகளை தண்ணீர் சூழ்ந்திருந்ததையும், காலையில் அவர்கள் தண்ணீரை வெளியேற்றியதையும் காண முடிந்தது.

நீர்இடி விழுந்ததா?

சேந்தமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்ததால் பேரூராட்சி பகுதியில் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த நிலையில் நேற்று காலை சுமார் 9 மணி அளவில் ஜங்களாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள ஒரு விவசாய நிலத்தில் நீர்இடி விழுந்ததாகவும் அதனால் தண்ணீர் பீறிட்டு வெளியேறுவதாகவும் பொதுமக்களிடையே தகவல் பரவியது. இதனால் சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு கூடினர். பின்னர் அவர்கள் அந்த விவசாய நிலத்தில் வெளியான நீர்குமிழிகளை கண்டு நீர்இடி விழுந்ததாக பரபரப்பாக பேசி கொண்டனர்.

இந்த தகவல் சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புஷ்பராஜ் மற்றும் ஜெயகுமார் ஆகியோருக்கும் கிடைத்தது. அதை தொடர்ந்து அவர்கள் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டனர். அப்போது அங்கு நீர்இடி விழுந்திருப்பதற்கான தடயம் இல்லை என அவர்கள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்களிடையே பரவிய தகவல் உண்மையில்லை என தெரியவந்தது. இருந்தபோதும் மாலை வரை பொதுமக்கள் அங்கு சென்று வயல்வெளியை பார்த்த வண்ணம் இருந்தனர். இதற்கிடையில் அருகில் உள்ள தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் சூழ்ந்து நின்றதை பார்வையிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனடியாக மோட்டார் வைத்து பள்ளியிலிருந்து தண்ணீரை வெளியேற்றினர்.


Next Story