அயோத்தி வழக்கில் தீர்ப்பு: கோவில், மசூதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


அயோத்தி வழக்கில் தீர்ப்பு: கோவில், மசூதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 10 Nov 2019 4:15 AM IST (Updated: 10 Nov 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தி வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள கோவில், மசூதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சேலம்,

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள் மற்றும் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.

சேலம் மாநகர் மற்றும் புறநகரில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், கோட்டை ஜாமியா மசூதி உள்ளிட்ட இடங்களில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் அங்கு தயார் நிலையில் வஜ்ரா வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது.

ரெயில் நிலையங்கள்

சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப் பட்டது. மேலும் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story