அயோத்தி தீர்ப்பு: மனக்கசப்புகள் நீங்கி நல்லுறவு தொடர வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி


அயோத்தி தீர்ப்பு: மனக்கசப்புகள் நீங்கி நல்லுறவு தொடர வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 9 Nov 2019 11:00 PM GMT (Updated: 9 Nov 2019 9:06 PM GMT)

அயோத்தி தீர்ப்பினால் மனக்கசப்புகள் நீங்கி நல்லுறவு தொடர வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

ஈரோடு,

நூற்றாண்டு கால அயோத்தி பிரச்சினைக்கு சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை ஏகமனதாக வழங்கி உள்ளது.

அயோத்தி பிரச்சினையை மையமாக வைத்து இதுவரை இருந்த மனக்கசப்புகள் நீங்கி, நல்லுறவு தொடர வேண்டும். பிரச்சினைகளுக்கு முடிவு காணப்பட்டு இருப்பதால், புதிய தொடக்கமாக இந்த தீர்ப்பு இருக்கும்.

நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்வது சிறந்த வழிமுறையாகும். இந்து-முஸ்லிம் சகோதர நல்லுறவுக்கு இந்த தீர்ப்பு அடித்தளமிட்டு இருக்கிறது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தவர்களின் வழிபாட்டு தலங்களுக்கும் மதபேதமின்றி இந்திய மக்கள் சென்று வருவது இந்தியாவின் பழம்பெரும் கலாசாரமாக உள்ளது. இது தொடர வேண்டும். நல்லிணக்கம், ஒற்றுமை உணர்வு மேலும் வளர வேண்டும். தேச நலனை காக்க வேண்டும். இதில் யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி மசூதியையும், கோவிலையும் விரைவாக கட்டி இந்திய அரசு பண்பாட்டை பேணிகாக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொள்கிறது.

உள்ளாட்சி தேர்தல்

நடிகர் ரஜினி இன்னும் அரசியலுக்கு வரவில்லை. தனிக்கட்சியும் தொடங்கவில்லை. இந்தநிலையில் அவரது கருத்துகளை அவர் கூற ஜனநாயகத்தில் இடம் உள்ளது.

நடைபெற உள்ள உள்ளாட்சித்தேர்தலை எதிர்கொள்ள த.மா.கா. 3 மாதங்களுக்கு முன்பே தயாராகி விட்டது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, உரிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணி அதற்காக அமைக்கப்பட்ட குழுவினரால் நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கூட்டம் வருகிற 22-ந்தேதி திருச்சியிலும், 23 மற்றும் 25-ந் தேதிகளில் சென்னையிலும் நடைபெறுகிறது. எங்கள் வெற்றி வாய்ப்பின் அடிப்படையில் அ.தி.மு.க.விடம் தேவையான இடங்கள் குறித்து பேசுவோம்.

இவ்வாறு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

பேட்டியின் போது இளைஞர் அணி மாநில தலைவர் எம்.யுவராஜா, மாநில நிர்வாகிகள் ஆறுமுகம், விடியல் சேகர், கவுதமன், எஸ்.டி.சந்திரசேகர் மற்றும் ஈரோடு மாவட்ட தலைவர் விஜயகுமார், சண்முகம், கராத்தே சக்திவேல் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story