கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது ; கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அமர்குமார் பாண்டே தகவல்


கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது ; கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அமர்குமார் பாண்டே தகவல்
x
தினத்தந்தி 9 Nov 2019 11:45 PM GMT (Updated: 9 Nov 2019 9:50 PM GMT)

அயோத்தி தீர்ப்பையொட்டி கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது என்று மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அமர் குமார் பாண்டே கூறினார்.

பெங்களூரு, 

அயோத்தி வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னதாக பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று 144 தடை உத்தரவு போடப்பட்டு இருந்தன. மதுபானம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது.

பெங்களூரு நகரில் போலீசார், நகர ஆயுதப்படை போலீசார், துணை ராணுவத்தினர், அதிவிரைவு படையினர் என்று 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது. பெங்களூரு மட்டுமின்றி மாநிலத்தில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் அதிகளவில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

குறிப்பாக மாநிலம் முழுவதும் மசூதி, கோவில்கள், மக்கள் அதிகம் கூடும் இடங் களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். நேற்று பெங்களூரு சிவாஜிநகர், டேனரி ரோடு, கே.ஆர்.மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகளில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், கர்நாடகத்தில் போடப்பட்டு இருந்த பாதுகாப்பு குறித்து மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அமர்குமார் பாண்டே கூறியதாவது:-

கர்நாடகத்தில் அனைத்து இடங்களிலும் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் விரிவாக எடுக்கப்பட்டு உள்ளது. பதற்றம் மற்றும் மிகவும் பதற்றமான பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் நிலைமையை பொறுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தேவை என்றால் கூடுதலாக துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பெங்களூரு போலீஸ் நிலையங்களில் சில போலீசார் பணியில் இருக்க மற்றவர்கள் அனைவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story