பொள்ளாச்சி அருகே தொடர்ந்து அட்டகாசம்: காட்டு யானை தாக்கி விவசாயி சாவு
பொள்ளாச்சி அருகே தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் காட்டு யானை தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அர்த்தநாரிபாளையம் பகுதியில் காட்டு யானை ஒன்று கடந்த சில மாதங்களாக அட்டகாசம் செய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த யானை அதேப்பகுதியை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் (வயது 55) என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்த அட்டகாசம் செய்தது.
இதை அறிந்த ராதாகிருஷ்ணன் காட்டு யானை விரட்ட முயன்றார். இதனால் ஆக்ரோஷம் அடைந்த காட்டு யானை, அவரை விரட்ட தொடங்கியது. எனவே யானையிடம் இருந்து தப்பிக்க அவர் வேகமாக ஓடினார். ஆனாலும் காட்டு யானை, ராதாகிருஷ்ணனை துதிக்கையால் பிடித்து தாக்கி தூக்கி கீழே போட்டு மிதித்தது. மேலும் அவரை யானை தந்தத்தால் குத்தியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதையடு்த்து காட்டு யானை வனப்பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது வழியில் வந்த அர்த்தநாரிபாளையம் அருகே உள்ள பேச்சிப்பள்ளம் பகுதியை சேர்ந்த திருமாத்தாள் என்பவரையும் காட்டு யானை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ராதாகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமாத்தாள் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை பிடிக்க வேண்டும் என்றுக்கூறி ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மதியம் 12 மணி அளவில் கோட்டூர் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், காட்டு யானையை பிடிக்கும் வரை, இறந்த ராதாகிருஷ்ணனின் உடலை வாங்க மாட்டோம் என்று கோஷமிட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் திடீரென ஆஸ்பத்திரி அருகே உள்ள வால்பாறை நா.மூ.சுங்கம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த கார், பஸ், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வால்பாறை கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ., ஆனைமலை தாசில்தார் வெங்கடாசலம், வால்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘அட்டகாசம் செய்து வரும் யானையை உடனடியாக பிடித்து மரக்கூண்டில் (கிரால்) அடைக்க வேண்டும். உயிர் இழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். படுகாயம் அடைந்த பெண்ணின் சிகிச்சைக்கான முழு செலவை அரசே ஏற்பதுடன் அவருக்கும் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே ராதாகிருஷ்ணன் உடலை வாங்கிச்செல்வோம்’ என்றனர்.
அதற்கு தாசில்தார் வெங்கடாச்சலம், ‘யானை தாக்கி இறந்த ராதாகிருஷ்ணன் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இதேபோல் காயம் அடைந்த பெண்ணிற்கு உரிய சிகிச்சை மற்றும் இழப்பீடு வழங்கப்படும். இச்சம்பவத்திற்கு காரணமான யானையை, கும்கி யானைகள் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் உதவியுடன் வனத்துறையினர் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். விரைவில் அந்த காட்டு யானை பிடிக்கப்படும்’ என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மதியம் 1.40 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அவர்கள் காட்டு யானை தாக்கி இறந்த ராதாகிருஷ்ணனின் உடலை வாங்கிச்சென்றனர். சாலைமறியல் போராட்டத்தால் 1¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story