திண்டுக்கல்லுக்கு சரக்கு ரெயில்களில் வந்த 5 ஆயிரம் டன் சர்க்கரை-கோதுமை


திண்டுக்கல்லுக்கு சரக்கு ரெயில்களில் வந்த 5 ஆயிரம் டன் சர்க்கரை-கோதுமை
x
தினத்தந்தி 10 Nov 2019 10:45 PM GMT (Updated: 10 Nov 2019 5:55 PM GMT)

திண்டுக்கல்லுக்கு சரக்கு ரெயில்களில் 5 ஆயிரம் டன் சர்க்கரை மற்றும் கோதுமை வந்தது.

திண்டுக்கல்,

தமிழகத்தில் பொதுவினியோக திட்டத்தில் ரேஷன்கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதில் அரிசி, கோதுமை போன்றவை வடமாநிலங்களில் இருந்து மத்திய தொகுப்பு மூலம் வாங்கப்படுகிறது. இந்த நிலையில் வடமாநிலங்களில் பருவமழை நன்றாக பெய்ததால், அரிசி மற்றும் கோதுமை அதிக அளவில் விளைந்துள்ளன. இதனால் தமிழகத்துக்கு பொதுவினியோக திட்டத்துக்கு தேவையான அரிசி, கோதுமை ஆகியவற்றை அரசு வாங்கி இருப்பு வைத்து வருகிறது. இதில் சுமார் 5 லட்சம் டன் அளவுக்கு அரிசி இருப்பு வைக்க, அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதனால் வடமாநிலங்களில் வாங்கப்படும் அரிசி, கோதுமை ஆகியவை சரக்கு ரெயில் மூலம் நேரடியாக அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு தேவையான ரேஷன்பொருட்கள், திண்டுக்கல் நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருப்பு வைக்கப்படுகிறது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்கு அரிசி கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 3 ஆயிரத்து 500 டன் கோதுமை சரக்கு ரெயிலில் திண்டுக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டது.

அதேபோல் மற்றொரு சரக்கு ரெயிலில் மராட்டிய மாநிலத்தில் இருந்து 1,500 டன் சர்க்கரை கொண்டு வரப்பட்டது. இதையடுத்து லாரிகள் மூலம், திண்டுக்கல் முருகபவனத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு, அவை கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து தேவையின் அடிப்படையில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story