ஆத்தூர் பகுதியில் சாலையை சீரமைக்க கோரி வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு
ஆத்தூர் பகுதியில் சாலையை சீரமைக்க கோரி வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆறுமுகநேரி,
தூத்துக்குடி-திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வடக்கு ஆத்தூர் மற்றும் தெற்கு ஆத்தூர் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சாலை மேலும் மோசமானது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் கந்தசஷ்டியை முன்னிட்டு அவசர அவசரமாக அந்த சாலை பள்ளங்களில் ஜல்லி, பாறைப்பொடிகளை கொட்டி சென்றனர். இதனால் எந்த வாகனங்கள் சென்றாலும் அந்த பகுதியில் புழுதியாக காணப்படுகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
இந்த சாலையை சரிசெய்ய பலமுறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த பயனும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையை சீரமைக்க வேண்டும். தவறினால் நாளை மறுநாள் (புதன்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வடக்கு ஆத்தூர் பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பஜார் பகுதிகளில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story