வாசுதேவநல்லூர் அருகே, மோட்டார் சைக்கிள் விபத்தில் செல்போன் கடை மேலாளர் சாவு


வாசுதேவநல்லூர் அருகே, மோட்டார் சைக்கிள் விபத்தில் செல்போன் கடை மேலாளர் சாவு
x
தினத்தந்தி 10 Nov 2019 10:30 PM GMT (Updated: 10 Nov 2019 7:45 PM GMT)

வாசுதேவநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் செல்போன் கடை மேலாளர் பரிதாபமாக இறந்தார். திருமணமான 6 மாதத்தில் அவர் இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாசுதேவநல்லூர், 

நெல்லை மாவட்டம் புளியங்குடி பரமானந்தா பள்ளிக்கூட தெருவை சேர்ந்த வெள்ளத்துரை மகன் முத்துக்குமார்(வயது29). இவருக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. இவர், புளியங்குடி பஸ் நிலையம் அருகிலுள்ள பிரபல செல்போன் கடையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

நேற்று காலையில் இவர் தேவிபட்டினத்தில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அந்த திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு மாலை 3 மணியளவில் புளியங்குடிக்கு அவர் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

வாசுதேவநல்லூர் அம்பேத்கர் சிலை அருகே சென்றபோது, சைக்கிளில் ஒருவர் திடீரென்று குறுக்கே வந்துள்ளார். அவர் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை நிறுத்த முத்துக்குமார் முயற்சித்துள்ளார். இதில் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் முத்துக்குமார் உடலை பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இவரது உடலை பார்த்து மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. திருமணமான 6 மாதத்தில் விபத்தில் முத்துக்குமார் இறந்த சம்பவம் புளியங்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story