டி.டி.வி. தினகரன் மீது கடும் பாய்ச்சல்: அ.தி.மு.க.வில் ஆதரவாளர்களுடன் இணைகிறார் புகழேந்தி


டி.டி.வி. தினகரன் மீது கடும் பாய்ச்சல்: அ.தி.மு.க.வில் ஆதரவாளர்களுடன் இணைகிறார் புகழேந்தி
x
தினத்தந்தி 10 Nov 2019 11:15 PM GMT (Updated: 10 Nov 2019 8:06 PM GMT)

அ.ம.மு.க.வை சேர்ந்த புகழேந்தி விரைவில் அந்த அமைப்பில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வில் இணைகிறார். அவர் டி.டி.வி. தினகரன் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.

சேலம்,

அ.ம.மு.க.வில் செய்தி தொடர்பாளராக இருந்து வந்த புகழேந்திக்கும், அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் டி.டி.வி.தினகரனுக்கு எதிரான கருத்துகளை புகழேந்தி தெரிவித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, புகழேந்தி சந்தித்து பேசினார். அப்போது, இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்க முதல்-அமைச்சரை சந்தித்ததாக அவர் கூறினார். இதனால் அவர் விரைவில் அ.தி.மு.க.வில் இணைவார் என்ற தகவல் வெளியானது.

இந்தநிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் சேலம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. எடப்பாடி சுரேஷ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அ.ம.மு.க. அதிருப்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்களிடம் புகழேந்தி கருத்துகளை கேட்டு ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அ.ம.மு.க.வினர் அனைவரும் விரைவில் அ.தி.மு.க.வில் சேருவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் புகழேந்தி விரைவில் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வில் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேட்டி

பின்னர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா எதுவும் இல்லாத புறம்போக்கு நிலமான அ.ம.மு.க.வில் பயணித்தோம். அ.ம.மு.க. என்கிற அமைப்பை தொடங்கி 2 ஆண்டுகள் ஆகியும் தலைமை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாமல் பெயரளவில் தான் உள்ளது. இது ஓர் ஏமாற்று வேலை என்பதை உணரமுடிகிறது.

அங்கு உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை இல்லை. டி.டி.வி. தினகரனை நம்பி சென்றவர்கள் தற்போது தெருவில் நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அவதாரம் முடிவுக்கு வந்துவிடும்

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவருக்கு எல்லாமே சாதகமாக அமைகிறது. சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பு ஆட்சியை எடப்பாடி பழனிசாமியிடமும், கட்சியை துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனை அறிவித்து ஒப்படைத்தார்கள். ஆட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது நிர்வாக திறமையில் சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். ஆனால் டி.டி.வி.தினகரனோ கட்சியை பிரித்து இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என லஞ்சம் கொடுத்து மாட்டிக்கொண்டார். உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் டி.டி.வி.தினகரனின் அரசியல் அவதாரம் முடிவுக்கு வந்துவிடும்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆட்களே இருக்க மாட்டார்கள். டி.டி.வி. தினகரனை நம்பி அவரது பின்னால் அணி வகுத்தோம். ஆனால் தனது சுயநலத்தாலும், ஆளுமை இன்மையாலும், நிர்வாக திறமையின்மையாலும் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

அ.தி.மு.க.வில் இணைவது...

டி.டி.வி.தினகரன் மீது வைத்துள்ள நம்பிக்கையை முழுவதுமாக இழந்துவிட்ட நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை ஏற்று அனைவரும் விரைவில் அ.தி.மு.க.வில் இணைவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் பேசி சென்னையில் அதற்கான விழா நடக்கும்.

சிறையில் இருந்து சசிகலா வெளியே வருவதை டி.டி.வி. தினகரன் விரும்பவில்லை. அவர் வெளியே வருவதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. சசிகலா வெளியே வந்தவுடன் அவர் அ.தி.மு.க.வில் இணைப்பது பற்றி அக்கட்சியின் தலைமை முடிவு செய்யும். டி.டி.வி.தினகரனை தவிர வேறு யாரு வந்தாலும் இணைத்து கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் சசிகலா வெளியே வந்தவுடன் அவரது நிலைப்பாடு தெரியும். கர்நாடக அரசியலுக்கு இனிமேல் நான் செல்லமாட்டேன். தமிழகத்தில் தான் எனது அரசியல் பயணம் இருக்கும்.

இவ்வாறு புகழேந்தி கூறினார்.

Next Story