விவசாயிகளுக்கு ரூ.2 லட்சத்தில் வேளாண் உபகரணங்கள் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி வழங்கினார்


விவசாயிகளுக்கு ரூ.2 லட்சத்தில் வேளாண் உபகரணங்கள் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி வழங்கினார்
x
தினத்தந்தி 10 Nov 2019 10:30 PM GMT (Updated: 10 Nov 2019 7:52 PM GMT)

போச்சம்பள்ளியில் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சத்தில் வேளாண் உபகரணங்களை அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி வழங்கினார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் காய்கறி பழங்கள் மற்றும் இதர அழுகும் பொருட்களுக்கான தொடர் வினியோக மேலாண்மை திட்டத்தின் கீழ் முதன்மை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, மாவட்ட கலெக்டர் பிரபாகர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி கூறியதாவது:- தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. 10 மாவட்டங்களில் 64 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.136.18 கோடி நிதி ஒதுக்கீட்டில் 10 இடங்களில், முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

வேளாண் உபகரணங்கள்

இதையடுத்து போச்சம்பள்ளி முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் தக்காளி, கத்தரி உள்ளிட்ட விளைப்பொருட்கள் எந்திரங்கள் மூலம் முதன்மை பதப்படுத்தும் பணியினை அவர் ஆய்வு செய்தார். மேலும் விவசாயிகளுடன் கலந்துரையாடி அரசினால் ஏற்படுத்தப்பட்ட வசதிகளை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொண்டார். முன்னதாக வேளாண்மை துறையின் சார்பில் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 2 லட்சம் மதிப்பில் வேளாண் உபகரணங்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர்(பொறுப்பு) கண்ணன், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் வேளாண்மை இணை இயக்குனர் சம்பத், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கலைவாணி, வேளாண்மை துணை இயக்குனர்கள் லட்சுமி, சுசிலா, அகன்டராவ், கிருஷ்ணன், சண்முகம், உதவி செயற்பொறியாளர் அருள் அழகன் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.



Next Story