பரிகார பூஜைக்கு கூடுதல் பணம் தராததால் ஆத்திரம்: சிவகங்கையில் மூதாட்டியை கொன்று நகையை பறித்துச் சென்ற சாமியார்


பரிகார பூஜைக்கு கூடுதல் பணம் தராததால் ஆத்திரம்: சிவகங்கையில் மூதாட்டியை கொன்று நகையை பறித்துச் சென்ற சாமியார்
x
தினத்தந்தி 10 Nov 2019 10:15 PM GMT (Updated: 10 Nov 2019 8:58 PM GMT)

சிவகங்கையில் பரிகார பூஜைக்கு கூடுதல் பணம் தராததால் மூதாட்டியைக் கொன்ற சாமியார் உள்ளிட்ட 2 பேர் அவரது கணவரையும் படுகாயப்படுத்திவிட்டு நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை, 

சிவகங்கையை அடுத்த ஒக்கூர் சின்னவீதியைச் சேர்ந்தவர் ஆதப்பன் (வயது 82) ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி மீனாட்சி (78). இவர்களின் பிள்ளைகள் திருமணமாகி சென்றுவிட்ட நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை ஆதப்பன் வீட்டிற்கு சென்ற பால்காரர் வீடு திறந்து கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது மீனாட்சி இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன. மேலும் ஆதப்பன் அந்த அறையின் ஒரு பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன், சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர், இன்ஸ்பெக்டர்கள் சீராளன், மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து துப்பறியும் நாய் கொண்டு வரப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சற்று தூரம் வரை சென்று நின்று விட்டது. சம்பவ இடத்தை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆதப்பனிடம் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. ஆதப்பன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் தனது மனைவி மீனாட்சியுடன் சிவகங்கை டி.புதூர் பகுதியை சேர்ந்த கணேசன் (25) என்ற சாமியாரிடம் சென்றார். அந்த சாமியார் பரிகார பூஜை செய்து வேல் ஒன்றை கொடுத்தாராம், அதற்காக சாமியாருக்கு ரூ.30 ஆயிரம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணேசனும், செல்லப்பா (24) என்பவரும் மீனாட்சியின் வீட்டிற்கு வந்து மேலும் பணம் கேட்டனராம். ஆனால் மேலும் பணம் கொடுக்க அவர் மறுத்தாராம். இதில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் 2 பேரும் ஆதப்பனையும், அவரது மனைவியையும் கீழே தள்ளிவிட்டு கழுத்தை நெரித்துள்ளனர். அதில் மீனாட்சி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

பின்னர் அவர் அணிந்திருந்த நகைகளை 2 பேரும் திருடிச்சென்றுள்ளனர். ஆதப்பன் மயங்கிய நிலையில் கிடந்ததால் அவர் இறந்து விட்டதாக கருதி அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கணேசனையும், செல்லப்பாண்டியையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆதப்பன் தீவிர சிகிச்சை பெற்று வருவதால், திருடி செல்லப்பட்ட நகையின் மதிப்பு பற்றி சரிவர தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story