மாவட்ட செய்திகள்

லாரி கவிழ்ந்ததால் திம்பம் மலைப்பாதையில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு + "||" + Because the truck was overturned 6 hours traffic impact on the Thimpam Mountain Trail

லாரி கவிழ்ந்ததால் திம்பம் மலைப்பாதையில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

லாரி கவிழ்ந்ததால் திம்பம் மலைப்பாதையில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி,

தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதை உள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதையானது திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இதனால் இந்த மலைப்பாதை வழியாக தினமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

முக்கியமாக கனரக வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும், பழுதாகி நிற்பதும் அடிக்கடி நிகழ்வுகளாக மாறிவிட்டன. இதனால் போக்குவரத்து பாதிப்பும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 4 மணி அளவில் திம்பம் மலைப்பாதையின் 21-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.

இந்த விபத்தால் வாகனங்கள் அனைத்தும் ரோட்டின் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றன. மேலும் ஆசனூர், பண்ணாரி சோதனை சாவடிகளில் வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டன.

இதுபற்றி அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டது. இதன் மூலம் காலை 10 மணி அளவில் கவிழ்ந்து கிடந்த லாரி மீட்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன. 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் திம்பம் மலைப்பாதை வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பஸ்சில் வந்த பயணிகள் தங்கள் ஊருக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர்.

இதேபோல் கர்நாடக மாநிலத்தில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு பாரம் ஏற்றி வந்த மற்றொரு லாரி திம்பம் மலைப்பாதையின் 26-வது கொண்டை ஊசி வளைவு அருகே மதியம் 12.30 மணி அளவில் வந்தபோது திடீரென்று பழுதாகி நின்றது. இதனால் மீண்டும் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே கிரேன் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு பழுதாகி நின்ற லாரி அங்கிருந்து 1.30 மணிக்கு அப்புறப்படுத்தப்பட்டது. இதன்காரணமாக 1 மணி நேரம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.