கணினி பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சான்றிதழ் - கலெக்டர் வழங்கினார்


கணினி பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சான்றிதழ் - கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 10 Nov 2019 10:15 PM GMT (Updated: 10 Nov 2019 9:15 PM GMT)

கணினி பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கலெக்டர் வீரராகவராவ் சான்றிதழ் வழங்கினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மத்திய அரசின் சிறப்பு கவனம் செலுத்தக்கூடிய மாவட்டம் என்ற அடிப்படையில் கணினி மற்றும் இணையதள பயன்பாடு தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் பி.என்.பணிக்கர் அறக்கட்டளை ஒருங்கிணைந்து நடத்திய பயிற்சியில் பங்கேற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் வீரராகவராவ் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:-

இந்திய அளவில் சிறப்பு கவனம் செலுத்தக்கூடிய மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 117 மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாகும். அதனடிப்படையில் மத்திய-மாநில அரசுகள் மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் பொது மக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம், பொது சுகாதாரம், கல்வி வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறன் மேம்பாடு அடிப்படை உள்கட்டமைப்பு வசதி மேம்பாடு ஆகிய காரணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போதைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாக பொதுமக்களிடையே கணினி மற்றும் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான அரசு நலத்திட்டங்கள் இணையவழியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொதுமக்களுக்கு கணினி மற்றும் இணைய பயன்பாடு குறித்து விழிப்புணர்வு மிகவும் அவசியமாகும். அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பி.என்.பணிக்கர் அறக்கட்டளை ஒருங்கிணைந்து ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்களிடையே கணினி மற்றும் இணைய பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் முதல்கட்டமாக 40 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி தொடங்கப்பட்டது.

இந்த பயிற்சியின் மூலம் கிராமப்புற மகளிர், கணினி, கைப்பேசி மற்றும் இணைய பயன்பாடு குறித்து எளிதில் அறிந்து கொள்ளவும் இணைய வழியில் அரசு நலத்திட்டங்களை விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து அறிந்து கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இதுபோன்ற முறையான பயிற்சி மற்றும் ஆர்வத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பல்வேறு உபயோக பொருட்களை இணைய வழி சந்தைப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் வாய்ப்பாக அமையும். மேலும் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் கிராம ஊராட்சி சேவை மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலமாக பொதுமக்கள் அரசு நலத்திட்டங்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இந்தசேவை மையங்கள் அனைத்திலும் இத்தகைய மின்னணு நூலகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பெண்கள் அனைவரும் கணினி மற்றும் இணையதள பயன்பாடு குறித்து விழிப்புணர்வு பெற்று பயனடைவர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் பிரதீப்குமார், உதவி மகளிர் திட்ட அலுவலர் விக்னேஷ்வரன், பி.என்.பணிக்கர் அறக்கட்டளையை சார்ந்த கமலாசன் பிள்ளை உள்பட அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Next Story