வருகிற 15-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வேன் ஒசகோட்டை தொகுதியில் சுயேச்சையாக போட்டி - சரத் பச்சேகவுடா அறிவிப்பு


வருகிற 15-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வேன் ஒசகோட்டை தொகுதியில் சுயேச்சையாக போட்டி - சரத் பச்சேகவுடா அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Nov 2019 4:15 AM IST (Updated: 11 Nov 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

ஒசகோட்டை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவேன் என்றும், வருகிற 15-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வேன் என்றும் சரத் பச்சேகவுடா அறிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(டிசம்பர்) 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசகோட்டையும் ஒன்றாகும். அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த சட்டசபை தேர்தலில் எம்.டி.பி.நாகராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பின்னர் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் ஒசகோட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பில் எம்.டி.பி.நாகராஜ் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.

ஆனால் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், சிக்பள்ளாப்பூர் தொகுதி எம்.பி. யுமான பச்சேகவுடாவின் மகன் சரத் பச்சேகவுடா ஒசகோட்டை தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்களை வலியுறுத்தி வருகிறார். பா.ஜனதா சார்பில் சீட் வழங்கவில்லை எனில் சுயேச்சையாக போட்டியிடவும் அவர் முடிவு செய்துள்ளார். இதையடுத்து, அவர் ஒசகோட்டை தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நேற்று ஒசகோட்டை தொகுதியில் பிரசாரத்தின்போது சரத் பச்சேகவுடா பேசியதாவது:-

ஒசகோட்டை தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்து தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறேன். எனக்கு நீங்கள் ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நான் சுயேச்சையாக போட்டியிடுவதால், என்னை ஆதரித்து எந்த தலைவர்களும் பிரசாரம் செய்ய மாட்டார்கள். இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதில் இருந்து பின்வாங்க மாட்டேன்.

மண்டியா நாடாளுமன்ற தேர்தலில் சுமலதா அம்பரீஷ் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். அதுபோல, ஒசகோட்டை தொகுதியில் நானும் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். எனக்கு நீங்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும். வருகிற 15-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன். மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் போன்று, இடைத்தேர்தலிலும் பிரசாரம் செய்தால் வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

ஒசகோட்டை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவேன் என்று சரத் பச்சேகவுடா அறிவித்திருப்பதால், அவரை சமாதானப்படுத்த பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டி உள்ளனர். எம்.டி.பி.நாகராஜும், சரத் பச்சேகவுடாவை சமாதானப்படுத்தும்படி முதல்-மந்திரி எடியூரப்பாவை வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story