மாவட்ட செய்திகள்

டி.கே.சிவக்குமாருடன் பா.ஜனதா பிரமுகர்கள் திடீர் சந்திப்பு - காங்கிரஸ் சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு? + "||" + With DK Shivakumar BJP leaders Sudden encounter On behalf of Congress Decision to contest the by-election?

டி.கே.சிவக்குமாருடன் பா.ஜனதா பிரமுகர்கள் திடீர் சந்திப்பு - காங்கிரஸ் சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு?

டி.கே.சிவக்குமாருடன் பா.ஜனதா பிரமுகர்கள் திடீர் சந்திப்பு - காங்கிரஸ் சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு?
பெங்களூருவில் முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை பா.ஜனதா பிரமுகர்கள் நேற்று திடீரென்று சந்தித்து பேசினார்கள். இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட பா.ஜனதாவில் சீட் கிடைக்காததால் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு, 

கர்நாடகத்தில் பெலகாவி மாவட்டம் கோகாக், காகவாட், அதானி உள்பட 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(டிசம்பர்) 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று(திங்கட்கிழமை) தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜனதா சார்பில் சீட் கொடுக்கப்பட உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் அந்த தொகுதிகளில் பா.ஜனதா சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களும், ஏற்கனவே கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பா.ஜனதா பிரமுகர்களும் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், கோகாக் மற்றும் காகவாட் தொகுதிகளில் பா.ஜனதா பிரமுகர்களாக இருக்கும் ராஜு காகே, அசோக் பூஜாரி ஆகிய 2 பேரும் நேற்று காலையில் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமார் வீட்டுக்கு திடீரென்று சென்றார்கள். பின்னர் அவர்கள் 2 பேரும் டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேசினார்கள்.

அப்போது பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர தாங்கள் தயாராக இருப்பதாகவும், இடைத்தேர்தல் நடைபெறும் கோகாக், காகவாட் தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் டி.கே.சிவக்குமாரிடம் ராஜு காகேவும், அசோக் பூஜாரியும் பேசியதாக தெரிகிறது. இதற்கு காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வதாக டி.கே.சிவக்குமார் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டி.கே.சிவக்குமாரை சந்தித்துவிட்டு, நிருபர்களை சந்திக்காமல் ராஜு காகே, அசோக் பூஜாரி ஆகியோர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

டி.கே.சிவக்குமாருடன் பா.ஜனதா பிரமுகர்கள் சந்தித்து பேசியது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொண்டு யார் வந்தாலும், அவர்களை கட்சிக்குள் சேர்த்து கொள்வோம்,‘ என்றார். இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்று கருதி பா.ஜனதா பிரமுகர்கள் 2 பேர் டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.