அடிப்படை வசதி செய்து தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
திருப்பூர் 19-வது வார்டு ஜி.என்.பாலன்நகரில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாநகராட்சி 19-வது வார்டுக்குட்பட்ட பொம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த ஜி.என்.பாலன்நகரில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 1500-க்கும் மேற்பட்டோர் அங்கு வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் போதுமான அளவில் செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மாநகராட்சியிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜி.என்.பாலன்நகரை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மக்கள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவன தலைவர் கார்மேகம், மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் தலைமையில் நேற்று காலை அந்த பகுதியில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் அந்த பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் கழித்து அவர்கள் பொம்மநாயக்கன்பாளையம் நெருப்பெரிச்சல் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் எங்கள் பகுதிக்கு சாலை, சாக்கடை கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் கடந்த ஆண்டு இந்த பகுதியில் செல்லும் ஓடை உடைந்து மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் பொம்மநாயக்கன்பாளையம் முதல் நஞ்சராயன்குளம் வரை உள்ள ஓடையை தூர்வாரி அகலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
இந்த பிரச்சினைகளுக்கு விரைவில் உரிய தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதன் பின்னரே பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியதுடன், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
Related Tags :
Next Story