நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் - கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி


நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் - கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 12 Nov 2019 4:30 AM IST (Updated: 12 Nov 2019 3:25 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை,

கேள்வி:- தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக கூறி வருகிறார்களே?

பதில்:- அ.தி.மு.க.வை பொறுத்தவரை நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றதன் மூலம் வெற்றிடம் இல்லை என்று நிரூபித்து விட்டோம்.

கேள்வி:- புகழேந்தி உள்பட அ.ம.மு.க.வை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வில் இணைய முன்வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்:- அ.ம.மு.க நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைய கடிதம் கொடுத்தால் அதுகுறித்து தலைமைக்கழகம் பரிசீலித்து முடிவு செய்யும்.

கேள்வி:- தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும்?

பதில்:-உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும். அது ஒரு தன்னாட்சி அமைப்பு, குறித்தகாலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும்என்று நம்புகிறோம்.

கேள்வி:- உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? கூட்டணி கட்சிகள் அதில் இடம் பெறுவார்களா?

பதில்:- உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி, உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்.

கேள்வி:- ‘ஆளுமை மிக்க தலைவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. வெற்றிடமாக உள்ளது’ என்று ரஜினி சொல்லியுள்ளாரே?

பதில்:- அவர் தலைவரா? கட்சி ஆரம்பித்து இருக்கிறாரா? அவர் ஒரு நடிகர், அரசியல் தலைவர்கள் யாராவது இதுபோன்று கூறியுள்ளனரா? சம்பந்தமில்லாதவர்கள் கூறும்போதுஅதுகுறித்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? ஏற்கனவே இதுதொடர்பான பதிலை பொதுக்கூட்டம் மூலம் நான் தெரிவித்துள்ளேன். விறுவிறுப்பான செய்தி வேண்டும் என்பதற்காக நீங்கள் இதுபோன்ற கேள்விகளை கேட்பதினால் தொடர்ந்து ஏதாவது சொல்லி கொண்டு இருக்கிறார்கள். அதை பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பெரிதுபடுத்தி வருகிறார்கள்.

கேள்வி:- காற்றில் மாசு அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறதே?

பதில்:- இதுபற்றி வருவாய்துறை அமைச்சர் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார்.

கேள்வி:- மாமல்லபுரம் அழகு படுத்தப்படுமா?

பதில்:-நிச்சயமாக அழகுபடுத்தப்படும். மாமல்லபுரம் தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளது, மாநில அரசின் கட்டுபாட்டில் இல்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் இணைந்து மிகச்சிறப்பாக, அழகாக, தமிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாக அமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விமானநிலையத்தில் முதல்-அமைச்சருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ஏ.கே..செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுசாமி, பொங்கலூர் தாமோதரன், செ.தாமோதரன், ஆவின் தலைவர் கே.பி.ராஜு, வால்பாறை அமீது, மேற்கு மண்டல ஐ.ஜி.பெரியய்யா, போலீஸ் கமிஷனர் சுமித்சரண், டி.ஐ.ஜி. கார்த்திகேயன், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல முன்னாள் தலைவர் கே.ஆர்.ஜெயராம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story