நெல்லை சந்திப்பில் மீட்கப்பட்ட குழந்தை தாயிடம் ஒப்படைப்பு
நெல்லை சந்திப்பில் மீட்கப்பட்ட குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை,
நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகில் ஒரு மருந்து கடை முன்பு நேற்று முன்தினம் நள்ளிரவு 6 மாதமான பெண் குழந்தை தனியாக தவித்துக் கொண்டிருந்தது. அந்த குழந்தையின் அருகில் தந்தை மது போதையில் கிடந்தார். இதைக்கண்ட நெல்லை சந்திப்பு போலீசார் மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் குழந்தையை மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை போதை தெளிந்து கண் விழித்த அந்த நபர், குழந்தை குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்து ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அதே நேரத்தில் அந்த குழந்தையின் தாயும் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தார்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சத்யராஜ் (வயது 28), அவரது மனைவி சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தங்கபாப்பா (24). இவர்களுடைய குழந்தை தமிழ்ஸ்ரீ என்பதும் தெரியவந்தது.
இவர்கள் 2 பேரும் சென்னையில் ஒரு கடையில் வேலை செய்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் திருவண்ணாமலையில் குடியிருந்து வந்தனர். கடந்த ஒரு மாதமாக சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் திருவண்ணாமலைக்கு செல்ல நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளனர். அப்போது சத்யராஜ் மது குடித்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சத்யராஜ், தங்கபாப்பாவை தாக்கி விட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு வந்த போது குடிபோதையில் செய்வதறியாமல் கீழே விழுந்து கிடந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், டாக்டர்கள் மற்றும் சமூக அமைப்பினர் அறிவுரைகளை கூறி குழந்தை தமிழ்ஸ்ரீயை, தாய் தங்கபாப்பாவிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story