மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: நெல்லையில் சாலையை சீரமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
நெல்லையில் சாலையை சீரமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் முற்றுகையிட்டனர்.
நெல்லை,
நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், பயிற்சி உதவி கலெக்டர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர், தலைவர் மாரியப்பபாண்டியன் தலைமையில், கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டர் ஷில்பாவிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், நெல்லை மாநகர பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி, பாதாள சாக்கடை சீரமைப்பு பணிக்காக குழிகள் தோண்டப்பட்டதால் சாலைகள் குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. தச்சநல்லூரில் இருந்து டவுன் வரை குழாய் பதிக்கும் பணி நடைபெற்று விட்டது. ஆனாலும் குழியை சரியாக மூடவில்லை. இதனால் சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் நெல்லை டவுனில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே உனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
அம்பை அருகே உள்ள பள்ளக்கால் பொதுக்குடி, பனஞ்சாடி கிராமத்தை ஆலங்குளம் தாலுகாவில் சேர்த்து தென்காசி மாவட்டத்தில் சேர்க்கக்கூடாது. எங்கள் ஊரை அம்பை தாலுகாவிலும், நெல்லை மாவட்டத்திலும் தொடர்ந்து இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தமிழர் விடுதலை களத்தினர் தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் முத்துகுமார் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிக்காலாடி, பூலித்தேவன் படையில் இருந்து வெள்ளையர்களை எதிர்த்து போராடி தன் உயிரை நீத்தவர். அவருடைய தியாகத்தை போற்றும் வகையில் நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் அவருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்ட வேண்டும். அவருடைய நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். அவருடைய நினைவு நாளான டிசம்பர் 20-ந்தேதி அங்கு சென்று வழிபாடு செய்ய சீரான வழித்தடம் அமைத்து தரவேண்டும் என்று கூறி உள்ளனர்.
மானூர் ரோகித்நகரில் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
விக்கிரமசிங்கபுரம் டானா, மேட்டுப்பாளையம் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் இந்த பகுதியில் 40 குடும்பத்தினர் 60 வருடத்திற்கு மேலாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு இது வரை பட்டா கிடைக்கவில்லை. எனவே எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிக்கின்ற மாணவிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பு பொதுதேர்வில் நெல்லை மாவட்டத்தில் 855 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 24 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று உள்ளனர். மீதி உள்ளவர்கள் தேர்ச்சி பெறவில்லை. தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 135 பேர் தான் தேர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது. எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்வு முடிவுகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி நெல்லையில் உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தின் விரிவாக்கப்பணியை உடனே தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழ்ப்புலிகள் அமைப்பினர் மாவட்ட செயலாளர் நெல்லை தமிழரசு தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரை சேர்ந்தவர் உச்சிமாகாளி செட்டியார். இவர் அவுல் மில் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது மகனுக்கும், சிவகாசியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமண ஏற்பாடு நடந்தது. திருமணத்திற்கு முந்தைய நாளில் அந்த பெண்ணின் பெற்றோர் திருமணத்தை நிறுத்திவிட்டனர். இதனால் எனக்கு ரூ.5 லட்சம் வரை செலவானது. எனவே திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பாளையங்கோட்டை தாலுகாவை சேர்ந்த 25 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவும், நலத்திட்ட உதவிகளும், வருவாய்த்துறை மூலம் கருணை அடிப்படையில் 7 பேருக்கு வேலை நியமன ஆணையும் வழங்கப்பட்டது. இதை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
Related Tags :
Next Story