மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து, பெங்களூருவில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் - சித்தராமையா தலைமையில் நடந்தது
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை கண்டித்து சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெங்களூரு,
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் பெங்களூரு டவுன்ஹால் முன்பு நேற்று நடைபெற்றது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, முன்னாள் மந்திரி ராமலிங்கரெட்டி, கர்நாடக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் வி.எஸ்.உக்ரப்பா, மகளிர் காங்கிரஸ் தலைவி புஷ்பா அமர்நாத் உள்பட அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சித்த ராமையா பேசியதாவது:-
பிரதமர் மோடிக்கு நாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பெரும் ஆதரவு வழங்கினர். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதியளித்தார். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு பதிலாக, இருக்கிற வேலைகள் பறிபோய் கொண்டிருக்கின்றன. இளைஞர்களின் கனவு நாசமாகிவிட்டது.
நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு உள்ளது. 6-வது ஆண்டாக நாட்டை ஆட்சி செய்து வரும், மோடி நாட்டை மோசமான நிலையை நோக்கி கொண்டு சென்று கொண்டிருக்கிறார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 9 சதவீதமாக இருந்தது. ஆனால் நாட்டின் வளர்ச்சி தற்போது 5 சதவீதமாக குறைந்துவிட்டது. ஆனால் உண்மை நிலை என்னவென்றால், வளர்ச்சி 3 சதவீதம் மட்டுமே.
ஒருபுறம் நாட்டின் வளர்ச்சி குறைந்து கொண்டு வருகிறது. மற்றொருபுறம் வேலையின்மை அதிகரித்து கொண்டே செல்கிறது. கள்ள நோட்டுகளை தடுப்பதாகவும், ஊழலை ஒழிப்பதாகவும் கூறி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி எடுத்தார். இதுவரை வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணம் வரவில்லை. ஊழல் குறையவில்லை.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, பெரிதும் பாதிக்கப்பட்டது, ஏழை மக்கள் தான். செல்வந்தர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெண்கள், விவசாயிகள் கஷ்டத்தில் உள்ளனர். உற்பத்தித்துறையும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. மத்தியில் பா.ஜனதா அரசு அமைந்தது முதல் மக்கள் நிம்மதியை இழந்துவிட்டனர்.
முதல்-மந்திரி எடியூரப்பா மக்களின் ஆசிர்வாதத்தால் ஆட்சிக்கு வரவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பின்வாசல் மூலம் அவர் ஆட்சி அமைத்துள்ளார். ஆபரேஷன் தாமரை மூலம் 17 எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா பக்கம் இழுத்தனர். இதனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தால் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலைக்கு எடியூரப்பாவே காரணம். தான் பெரிய சாதனை படைத்துவிட்டதாக எடியூரப்பா பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுக்கிறார். இதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மந்திரி ராமலிங்கரெட்டி பேசுகையில், “நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு எதுவும் தெரியவில்லை. அதனால் தான் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. கர்நாடகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறது. விவசாயிகள் கஷ்டத்தில் இருந்தாலும் அவர்களுக்கு உதவ மத்திய அரசு தேவையான அளவுக்கு நிதி ஒதுக்கவில்லை” என்றார்.
Related Tags :
Next Story