மங்களூரு, தாவணகெரே மாநகராட்சிகள் உள்பட, 14 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் - காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது


மங்களூரு, தாவணகெரே மாநகராட்சிகள் உள்பட, 14 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் - காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது
x
தினத்தந்தி 12 Nov 2019 4:30 AM IST (Updated: 12 Nov 2019 5:06 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு, தாவணகெரே மாநகராட்சிகள் உள்பட 14 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி மங்களூரு, தாவணகெரே ஆகிய 2 மாநகராட்சிகள், கனகபுரா, கோலார், கோலார் தங்கவயல், முல்பாகல், கவுரிபித்தனூர், சிந்தாமணி ஆகிய 6 நகரசபைகள், மாகடி, பீரூர், கம்பிளி ஆகிய 3 புரசபைகள், ஜோக்-கார்க்கல், குந்துகோல், கூட்லகி ஆகிய 3 பட்டண பஞ்சாயத்துகள் என மொத்தம் 14 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

14 உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள மொத்தம் 418 வார்டுகளுக்கு இந்த தேர்தல் நடக்கிறது. இதில் 2 மாநகராட்சிகளில் 105 வார்டுகளுக்கும், 6 நகரசபைகளில் 194 வார்டுகளுக்கும், 3 புரசபைகளில் 69 வார்டுகளுக்கும், 3 பட்டண பஞ்சாயத்துகளில் 50 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த அக்டோபர் மாதம் 24-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடை பெற்றது.

இந்த தேர்தலில் மொத்தம் 1,587 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கோலார் தங்கவயல் நகரசபையில் 35 வார்டுகளில் 213 வேட்பாளர்கள் போட்டியிட்டு உள்ளனர். இந்த தேர்தலில் 9 வார்டுகளில் தலா ஒருவர் மட்டுமே களத்தில் இருப்பதால், அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இந்த 9 வார்டுகள் போக மீதமுள்ள 409 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. இதற்காக மொத்தம் 1,388 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 13 லட்சத்து 4 ஆயிரத்து 614 வாக்காளர்கள் உள்ளனர்.

இவை தவிர ஹாசன் மாவட்டத்தில் ஒலேநரசிபுரா புரசபை, சாம்ராஜ்நகரில் கொள்ளேகால் நகரசபை, விஜயாப்புராவில் சடசன பட்டண பஞ்சாயத்து, பாகல்கோட்டையில் மகாலிங்கபுரா புரசபை, கலபுரகியில் சித்தாபுரா புரசபை ஆகியவற்றில் காலியாக உள்ள தலா ஒரு வார்டில் இடைத்தேர்தலும் இன்று நடக்கிறது.

மேலும் கிராம பஞ்சாயத்துகளில் காலியாக உள்ள 213 வார்டுகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி நேற்று மாலை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி உபகரணங்களும் தேர்தல் அலுவலர்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடி களுக்கு புறப்பட்டு சென்றனர்.

தேர்தல் முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள், வருகிற 14-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இன்று நடைபெறும் தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

Next Story