வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீரை வெளியேற்றகோரி - சேலத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
சேலத்தில் வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீரை வெளியேற்றகோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம்,
சேலம் மாநகராட்சி 59-வது வார்டுக்கு உட்பட்ட ராமையான் காடு, முல்லைநகர் ஆகிய பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் சாக்கடை கால்வாய்களை சரிவர தூர்வாராத காரணத்தினால் மழை பெய்யும்போது மழைநீரோடு சாக்கடை கழிவுநீர் கலந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். இங்கு சமீபத்தில் பெய்த கனமழையால் சாக்கடை கழிவுநீருடன் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.
கனமழையால் தெரு மற்றும் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரையும், அங்கு தேங்கியுள்ள கழிவுநீரையும் வெளியேற்றி அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை சேலம்-திருச்சி சாலையில் உள்ள குகை பகுதியில் திரண்டனர்.
இதையடுத்து அவர்கள் வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீரை வெளியேற்றகோரியும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிப்பதாகவும் கூறி, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை தூர்வாரி கழிவுநீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது, மாநகராட்சி அதிகாரிகளிடம் எடுத்து கூறி சாக்கடை கால்வாய்களை சீரமைக்கவும், வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீரை வெளியேற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story