சொத்தை பிரித்து தராததால் ஆத்திரம்: தந்தை, தங்கையை கொலை செய்ய முயன்ற விவசாயி கைது


சொத்தை பிரித்து தராததால் ஆத்திரம்: தந்தை, தங்கையை கொலை செய்ய முயன்ற விவசாயி கைது
x
தினத்தந்தி 12 Nov 2019 10:15 PM GMT (Updated: 12 Nov 2019 4:35 PM GMT)

சொத்தை பிரித்து தராததால் ஆத்திரம் அடைந்து தந்தை, தங்கையை கொலை செய்ய முயன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 66). இவரது மகன் ராமமூர்த்தி(33). விவசாயியான இவர் தனது தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்து வந்தார். இதனால் தந்தை, மகன் இருவருக்கும் இடையே விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி ஒழுகிக் கொண்டு இருந்தது . அதை சரி செய்ய மாட்டாயா? என தனது தந்தையிடம் மகன் ராமமூர்த்தி கேட்டு திட்டியுள்ளார். அதற்கு தியாகராஜன் தனது மகள் ரம்யாவிடம்(27) தொட்டியை சரி செய்து தருமாறு கோரியுள்ளார். அதன்படி நேற்று தன் வீட்டிலுள்ள கத்தி மற்றும் ஒட்டுவதற்கு டேப் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு மாடிக்கு ரம்யா சென்றுள்ளார்.

கொலை முயற்சி

அப்போது தண்ணீர் தொட்டியை நீயே சரி செய்து விடுவாயா? என ராமமூர்த்தி தகாத வார்த்தைகளால் திட்டி ரம்யா வைத்திருந்த கத்தியை பிடுங்கி, ரம்யாவின் வலது கையில் குத்தினார். சத்தம் கேட்டு வெளியே வந்த தியாகராஜன் மகனை தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ராமமூர்த்தி தனது தந்தையின் கை, தலை, கால், தோள்பட்டை ஆகிய பகுதிகளிலும் கத்தியால் பலமாக குத்தினார். பலத்த கத்திக்குத்து பட்ட இருவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது தந்தையும், மகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் கொலை முயற்சி என வழக்குப்பதிவு செய்து, ராமமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story