திருச்சி முகாம் சிறையில் உண்ணாவிரதம் எதிரொலி: வங்காளதேச அகதிகள் 7 பேர், ரெயிலில் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பு


திருச்சி முகாம் சிறையில் உண்ணாவிரதம் எதிரொலி: வங்காளதேச அகதிகள் 7 பேர், ரெயிலில் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 12 Nov 2019 11:15 PM GMT (Updated: 12 Nov 2019 6:20 PM GMT)

திருச்சி முகாம் சிறையில் அகதிகளின் உண்ணாவிரதத்தை தொடர்ந்து, வங்காளதேச அகதிகள் 7 பேர் ரெயிலில் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சி,

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு போலி பாஸ்போர்ட் மூலம் சட்ட விரோதமாக இந்தியா வந்தவர்கள், விசா காலம் முடிந்தும் இந்தியாவில் இருந்து சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் இருப்பவர்கள், போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். முகாம் சிறையில் இலங்கை, சீனா, வங்காளதேசம், பல்கேரியா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

முகாம் சிறையில் இருந்தபடியே, தங்கள் மீதான வழக்கிற்கு அவ்வப்போது கோர்ட்டில் ஆஜராகி வந்தனர். நீண்டகாலமாகியும் வழக்கு நிலுவையில் இருந்து வருவதாகவும், உறவினர்களை பார்க்க முடியாமல் ஆண்டுக்கணக்கில் இருப்பதால் தங்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி முகாம் சிறையில் 46 பேர் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 26 பேர், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றனர். சிலர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்களில் ஒருவர் அங்குள்ள மரத்தில் ஏறி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்ததையும், ஒருவர் சமையல் அறையில் இருந்த மண்எண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதையும் பார்த்த முகாம் காவலர்கள், அவர்களை தடுத்து நிறுத்தினர்.

தூக்க மாத்திரைகளை தின்றவர்களில் 15 பேர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரத போராட்டத்தின் எதிரொலியாக, முதல்கட்டமாக வங்காளதேசத்தை சேர்ந்த அகதிகள் 7 பேரை சொந்த நாட்டுக்கு அனுப்ப அனுமதி கிடைத்தது. அதன்பேரில், வங்காளதேசத்தை சேர்ந்த முகமது ரோனிக், அஷ்ரப் அலி, கோகுல்ராஜ், அல்அமீன், பர்கத், ராபின் மற்றும் பாபு ஆகிய 7 பேரும், ரெயில் மூலம் வங்காளதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுடன் திருச்சி ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது ரபீக் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் 8 போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புடன் செல்கிறார்கள்.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த நாட்டிற்கு 7 பேரும் பயணம் மேற்கொண்டனர். இது குறித்து பாதுகாப்புக்கு சென்ற போலீசார் கூறுகையில், ‘இந்தியா-வங்காளதேச எல்லைப்பகுதியில் 7 பேரும் அங்குள்ள தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள். ரெயில் மூலம் வங்காளதேச நாட்டின் எல்லையை சென்றடைய 2 நாட்கள் ஆகும்’ என்றனர்.

Next Story