இந்த ஆண்டில் மேட்டூர் அணை 4-வது முறையாக நிரம்பியது


இந்த ஆண்டில் மேட்டூர் அணை 4-வது முறையாக நிரம்பியது
x
தினத்தந்தி 12 Nov 2019 11:00 PM GMT (Updated: 12 Nov 2019 6:38 PM GMT)

இந்த ஆண்டில் மேட்டூர் அணை 4-வது முறையாக நிரம்பி உள்ளது.

மேட்டூர்,

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக மேட்டூர் அணை திகழ்கிறது. இந்த ஆண்டு கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை குறிப்பிட்ட காலங்களில் போதிய அளவு பெய்துள்ளது. இதனால் மேட்டூர் அணை இந்த ஆண்டில் ஏற்கனவே 3 முறை நிரம்பியது.

குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதியும், அதே மாதம் 24-ந் தேதியும், கடைசியாக கடந்த மாதம் 23-ந் தேதியும் என 3 முறை அணை நிரம்பி இருந்தது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அணை நீர்மட்டம் மீண்டும் குறைய தொடங்கியது.

4-வது முறையாக நிரம்பியது

இதன் தொடர்ச்சியாக கடந்த 10-ந் தேதி அணை நீர்மட்டம் 119.11 அடியாக இருந்தது. அதே நேரத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரம் அடைந்ததால் அணைக்கு நீர்வரத்து படிப் படியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் காலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரத்து 21 கன அடியாக அதிகரித்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரத்து 600 கனஅடி நீர் திறந்து விடப் பட்டது.

அணையில் இருந்து தண்ணீர் திறப்பை விட நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நீர்மட்டம் நேற்று முன்தினம் இரவு 120 அடியை எட்டியது. இரவு 11 மணியளவில் அணை நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி இந்த ஆண்டில் 4-வது முறையாக நிரம்பியது. நேற்று காலையிலும் அணை நீர்மட்டம் 120 அடியாகவே இருந்தது.

காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 21 ஆயிரத்து 946 கனஅடியாக குறைந்துள்ளது. அணை நிரம்பி உள்ளதால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் அளவு நேற்று வினாடிக்கு 20 ஆயிரத்து 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர், நீர்மின்நிலையங்கள் வழியாகவும், 600 கனஅடி நீர் கால்வாய் பாசனத்துக்கும் திறந்து விடப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக (ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கனஅடி) உள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இந்த ஆண்டில் மேட்டூர் அணை 4-வது முறையாக நிரம்பி உள்ளதால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினரும், போலீசாரும், காவிரி கரையோர கிராமங்களை கண்காணித்து வருகின்றனர்.


Next Story