கால்நடைகளின் சிகிச்சைக்காக ‘அம்மா ஆம்புலன்ஸ்’ சேவை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்


கால்நடைகளின் சிகிச்சைக்காக ‘அம்மா ஆம்புலன்ஸ்’ சேவை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Nov 2019 4:30 AM IST (Updated: 13 Nov 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

கால்நடைகளின் சிகிச்சைக்காக அம்மா ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கரூர்,

கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடைகளின் அவசர சிகிச்சைக்கு பயன்படும் வகையில் ‘அம்மா ஆம்புலன்ஸ்’ சேவை தொடக்க விழா புலியூர் ராணிமெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அம்மா ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின் அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் உள்ள கால்நடை நிலையங்களில் அனைத்து சிகிச்சை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. சில சமயங்களில் உயிர்காக்கும் அவசர சிகிச்சை வழங்க வேண்டிய நேரங்களிலும், நடக்க இயலாத மற்றும் கால்நடை நிலையங்களுக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற இயலாத சூழ்நிலையில், கால்நடைகள் வளர்ப்போரின் நோயுற்ற கால்நடைகளில் இறப்பு ஏற்பட்டு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். எனவே, இதை தடுத்திடும் பொருட்டு ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு நடமாடும் கால்நடை மருத்துவ அவசர ஊர்தி சேவைத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மூலம் பரீட்சார்த்த முறையில் காஞ்சீபுரம், மதுரை, நாமக்கல், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு தலா 2 ஆம்புலன்ஸ்கள் வீதம் அறிமுகப்படுத்தப்பட்டன.

உபகரணங்கள்

இந்த ஆம்புலன்ஸ் சேவை விவசாயிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இதர மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 39 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பில் குளிர்சாதன வசதியுடன் மாற்றி அமைக்கப்பட்ட 22 கால்நடை அவசர மருத்துவ ஊர்தியான ‘அம்மா ஆம்புலன்ஸ்’ சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் கடந்த 5-ந் தேதி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்திற்கான ‘அம்மா ஆம்புலன்ஸ்’ சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்சில், கால்நடைகளின் நோய் தன்மையை அறிந்து அங்கேயே அவசர சிகிச்சை வழங்கும் வகையில் தேவையான அனைத்து அத்தியாவசிய கருவிகள் மற்றும் உபகரணங்கள், மருந்துகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. சிறிய கால்நடைகளை பரிசோதனை செய்வதற்கு மடங்கக் கூடிய பரிசோதனை மேஜை அமைக்கப்பட்டுள்ளது. வாகனம் செல்ல இயலாத இடங்களுக்கு சென்று நடக்க இயலாத கால்நடைகளை ஆம்புலன்சில் எடுத்து வருவதற்கு ஏதுவாக தள்ளுவண்டி வசதி செய்யப்பட்டுள்ளது. நடக்க இயலாத கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிட ஏதுவாக சக்திவாய்ந்த ‘ஹைட்ராலிக்’ பளு தூக்கி பொருத்தப்பட்டுள்ளது.

மின்பலகைகள்

மேலும் இரவில் மின்சார வசதியில்லாத இடத்தில் சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக வாகனத்தின் வெளியே ஜெனரேட்டர் மூலம் செயல்படக்கூடிய அதிக அளவில் வெளிச்சம் தரக்கூடிய பெரிய ஒளிவிளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி கால்நடை பராமரிப்பு துறைப்பணிகள் மற்றும் திட்டங்கள் பற்றி விரிவாக கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் தொலைக்காட்சி ஒன்று வாகனத்தின் உள்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது.

வாகனத்தின் பக்கவாட்டு வெளிப்புறத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் பணிகளை பொதுமக்களுக்கு விளக்கும் ஒளிரும் மின்பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சேவையை 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் விவசாயிகள் பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல் கரூர் நகராட்சி பகுதியில் பல்வேறு திட்டப்பணிகளையும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். மேலும் புதிய திட்டப்பணிகளுக்கு பூமி பூஜையை அவர் தொடங்கி வைத்தார். குடிநீர் தொட்டிகள், பயணிகள் நிழற்குடை உள்ளிட்டவைகளையும் திறந்து வைத்தார்.

தடகள போட்டிகள்

முன்னதாக அதே பள்ளியில் பள்ளிக்கல்வி துறை சார்பில் நடந்த தடகள போட்டிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். போட்டியில் வீரர், வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கீதா எம்.எல்.ஏ., திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் காளியப்பன், நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் மார்்க்கண்டேயன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் பேங்க் நடராஜன், கால்நடை பராமரிப்புத்துறை இனை இயக்குனர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் செல்வராஜ், கமலக்கண்ணன், வி.சி.கே.ஜெயராஜ், பொரணி கணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர். அணி செயலாளர் தானேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story