நெல்லை அருகே, விளைநிலங்களை சேதப்படுத்தும் விலங்குகளை விரட்டுவது குறித்த செயல்விளக்கம்


நெல்லை அருகே, விளைநிலங்களை சேதப்படுத்தும் விலங்குகளை விரட்டுவது குறித்த செயல்விளக்கம்
x
தினத்தந்தி 12 Nov 2019 10:30 PM GMT (Updated: 12 Nov 2019 7:22 PM GMT)

நெல்லை அருகே விளைநிலங்களை சேதப்படுத்தும் விலங்குகளை விரட்டுவது குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

நெல்லை, 

நெல்லை அருகே தாழையூத்தில் விவசாயிகளின் விளைநிலங்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை எப்படி விரட்டுவது என்பது குறித்த செயல் விளக்கம், அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கங்கைகொண்டான் காப்புக்காட்டினை ஒட்டி உள்ள பகுதிகளில் வன உயிரினங்களான காட்டு பன்றிகள், மான், மிளா மற்றும் யானை ஆகியவற்றால் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் அதிக அளவில் சேதமடைகிறது. வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடைவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேளாண்மை துறையின் மூலம் மாவட்டத்தில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள 12 வட்டாரங்களில் வனவிலங்குகளை விரட்டுவதற்கான தொழில்நுட்பத்தினை செயல்விளக்கமாக செய்து காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக தாழையூத்து கிராமத்தில் “நீல்போ“ என்ற வனவிலங்கு விரட்டியினை 1 லிட்டர் மருந்திற்கு 40 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து அதில் சணல் அல்லது நூல் கயிற்றினை ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து, கயிற்றினை சாகுபடி செய்துள்ள வயலினை சுற்றி 1 முதல் 1.5 அடி உயரத்தில் கட்ட பரிந்துரை செய்யப்படுகிறது. அவ்வாறு கட்டும் போது மருந்தில் நனைக்கப்பட்ட கயிற்றில் இருந்து வரும் வாசனை குறைந்தது 20 முதல் 25 நாட்களுக்கு பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்தாத வகையில் பாதுகாக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் “நீல்போ“ என்ற வனவிலங்கு விரட்டியினை 1 லிட்டர் பாட்டிலை 20 விவசாயிகளுக்கு கலெக்டர் ஷில்பா வழங்கினார். இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு அதிகாரிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), அசோக்குமார், வேளாண்மை உதவி இயக்குனர் சுபசெல்வி, வேளாண்மை அலுவலர்கள் கண்ணன், திருமலைச்சாமி, ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story