தென்னிலை அருகே தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது


தென்னிலை அருகே தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது
x
தினத்தந்தி 12 Nov 2019 11:00 PM GMT (Updated: 12 Nov 2019 7:25 PM GMT)

தென்னிலை அருகே தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம் தென்னிலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தலைமையிலான போலீசார் தென்னிலை அருகே தொப்பம்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். போலீசார், மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

மேலும் விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் சித்தேஸ்வரகோம்பைகாடு பகுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 25), சேலம் கோடிக்காடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (19), சேலம் வேலம்மாள்வலசு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (34) என்றும், அவர்கள் 3 பேரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

3 பேர் கைது

மேலும், அந்த 3 பேரும் சேர்ந்து கடந்த 3-ந்தேதி தென்னிலை அருகே கோடந்தூரில் மளிகை கடை நடத்திவரும் மகேஸ்வரி என்ற பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியையும், கடந்த மார்ச் மாதம் கொடுமுடியை சேர்ந்த மகேஷ்வரி என்ற ஆசிரியையிடம் 11 பவுன் தங்க சங்கிலியையும், கடந்த ஏப்ரல் மாதம் க.பரமத்தி அருகே காஞ்சினாப்பட்டியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வரும் சுமதி என்பவரிடம் 6 பவுன் தங்க சங்கிலியையும் பறித்ததையும் ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து போலீசார், தங்கராஜ், பிரகாஷ், சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 24 பவுன் தங்க சங்கிலிகளை பறிமுதல் செய்தனர். மேலும் வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.


Next Story