ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் பாதைக்கான ஆயத்த பணி தீவிரம் - ஐ.ஐ.டி. குழுவினரும் ஆய்வு
ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் பாதை அமையும் இடத்தில் ஆய்வுக்காக மண்ணை சேகரிக்கும் பணியில் ஐ.ஐ.டி. குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தனுஷ்கோடி. மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கிய தனுஷ்கோடி கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல் காரணமாக முழுமையாக அழிந்து போனது. புயல் பாதிப்பில் தனுஷ்கோடி வரையிலான ரெயில் பாதையும் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டன.
இந்த நிலையில் தனுஷ்கோடி வரை மீண்டும் ரெயில் பாதை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அதற்காக சுமார் 208 கோடி நிதியும் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக ராமேசுவரம்-தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் மண் அய்வு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ரெயில் பாதை அமையவுள்ள இடத்தை நேற்று சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யிலிருந்து கடலியல்துறை பேராசிரியர் சுந்தரவடிவேலன், உதவி திட்ட ஆலோசகர் சசிகுமார் பார்வையிட்டனர். அப்போது ரெயில் பாதை அமையவுள்ள இடத்தில் உள்ள மணலை ஆய்வுக்காக சேகரித்து செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஐ.ஐ.டி. குழுவினர் கூறியதாவது:-
ராமேசுவரம் தனுஷ்கோடி இடையே ரெயில் பாதை அமையவுள்ள 18 கிலோ மீட்டரில் 60 இடங்களில் 1 மீட்டர் ஆழம் வரை ஜே.சி.பி. எந்திரம் மூலம் தோண்டி மண் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 4 நாளில் இந்த மண் சேகரிக்கும் பணிகள் முடிவடையும். சேகரிக்கப்பட்ட மண் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சோதனை செய்யப்படும். இந்த கடற்கரை பகுதி மணலுக்கு எந்த மாதிரியான தொழில் நுட்பம் மற்றும் கட்டுமான பொருட்களை பயன்படுத்தலாம் என்பதற்காகவே மண்ணை கொண்டு சென்று சோதனை நடத்தவுள்ளோம். இந்த ஆய்வறிக்கையானது ரெயில்வே துறையிடம் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story