கரும்பு தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு: பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி உடல் வீச்சு


கரும்பு தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு: பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி உடல் வீச்சு
x
தினத்தந்தி 12 Nov 2019 11:00 PM GMT (Updated: 12 Nov 2019 8:22 PM GMT)

கண்டமங்கலம் அருகே கரும்பு தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கண்டமங்கலம், 

கண்டமங்கலம் அருகே உள்ள பெரியபாபு சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். விவசாயி. இவருடைய மனைவி தில்லைநாயகி (வயது 45). இவர்களுக்கு பன்னீர்செல்வம் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

மோகனுக்கு பெரியபாபுசமுத்திரம் பம்பை ஆறு பகுதியில் கரும்பு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்துக்கு நேற்று முன்தினம் மதியம் தண்ணீர் பாய்ச்சுவதற்காக தில்லைநாயகி சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. வெளியே சென்றிருந்த மகன் பன்னீர்செல்வம் வீட்டுக்கு வந்தார். தாயார் வீட்டில் இல்லாததால் பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுபற்றி புதுச்சேரிக்கு சென்றிருந்த தந்தை மோகனிடம் பன்னீர்செல்வம் செல்போனில் தெரிவித்தார். அவர் உடனே வந்து கிராம மக்களுடன் சேர்ந்து மனைவியை தேடினார். கரும்பு தோட்டத்தில் மண்வெட்டியும், தில்லைநாயகியின் செருப்பும் கிடந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் அங்குள்ள கிணறு மற்றும் கரும்பு தோட்டத்தில் தேடிப்பார்த்தனர். அங்கும் காணவில்லை.

இதுபற்றி கண்டமங்கலம் போலீசில் மோகன் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், கொளஞ்சியப்பன் மற்றும் போலீசார் பெரியபாபு சமுத்திரம் கரும்பு தோட்டத்துக்கு சென்று தில்லைநாயகியை தேடினர்.

அங்கு சோளத்தட்டைகள் அடுக்கி வைத்திருந்த புதரில் சாக்கு மூட்டை ஒன்று ரத்த கறையுடன் கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றி பிரித்து பார்த்தபோது, அதற்குள் பிளாஸ்டிக் சாக்கு பையில் தில்லைநாயகி கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவர் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. அவை ஒரு பவுன் இருக்கும் என்று கூறப்படுகிறது. யாரோ மர்மநபர்கள் தில்லைநாயகியை நகைக்காக அடித்து கொலை செய்து, சாக்கு மூட்டையில் கட்டி சோளப்போரில் மறைத்து வைத்துள்ளதாக போலீசார் கருதினர்.

இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். விழுப்புரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய், கொலை நடந்த இடத்தில் இருந்து அருகில் உள்ள செங்கல்சூளை வரை சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து தில்லைநாயகியின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தில்லைநாயகியை கொலை செய்தது யார்? நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

இந்தநிலையில் பக்கத்து நிலத்தை சேர்ந்த அருள்ராஜ் (30) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் பற்றி விசாரித்தபோது, புதுச்சேரி மாநிலம் மடுகரையில் குடும்பத்துடன் வசித்து வருவதும், அவருக்கும், மோகன் குடும்பத்துக்கும் ஏற்கனவே நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததும் அம்பலமானது.

இதையடுத்து கண்டமங்கலம் போலீசார் மடுகரைக்கு சென்று அருள்ராஜை பிடித்து விசாரித்தனர். நேற்று (அதாவது நேற்று முன்தினம்)கரும்பு தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சும்போது, ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து மண்வெட்டியால் தில்லைநாயகியை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

கொலையை மறைக்க தில்லைநாயகியின் உடலை அருகில் உள்ள பம்பை ஆற்றில் வீச திட்டமிட்டு தனது வீட்டுக்கு சென்று சாக்குகளை அருள்ராஜ் எடுத்துவந்தார். அதில் தில்லைநாயகி உடலை திணித்த போது அவரது குடும்பத்தினர் அங்கு தேடி வந்ததால், சாக்கு மூட்டையை சோளப்போரில் வீசிவிட்டுச் சென்றதை ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து தில்லைநாயகியின் கம்மல், மூக்குத்தி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அருள்ராைஐ போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story