திருவள்ளுவரை இந்து சாமியாராக்க முயற்சி தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு


திருவள்ளுவரை இந்து சாமியாராக்க முயற்சி தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Nov 2019 11:00 PM GMT (Updated: 12 Nov 2019 8:44 PM GMT)

‘திருவள்ளுவரை இந்து சாமியாராக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது’ என்று தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டி.ரவிக்குமார் எம்.பி., துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி, பொருளாளர் முகமது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினர்களாக திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்து சாமியாராக்க முயற்சி

ஆர்ப்பாட்டத்தின்போது தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-

திருவள்ளுவர் சிலை மீது சாணி அடிப்பதால் அவரது மேன்மை ஒன்றும் கெட்டுவிட போவதில்லை. ஆனாலும் இதை வன்மையாக கண்டிக்கிறோம். அத்துடன் அவரது சிலைக்கு ருத்ராட்ச மாலை, காவி துண்டு அணிவித்ததையும் ஏற்க முடியாது. திருவள்ளுவருக்கு எந்த சாயத்தையும் பூசி அவரை சுருக்கி விடமுடியாது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது? என்று தெரியவில்லை.

திருவள்ளுவர் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடி, அதன்மூலம் தமிழகத்தில் காலூன்ற பா.ஜ.க. நினைக்கிறது. திருவள்ளுவரை இந்து சாமியாராக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. பா.ஜ.க.வின் நினைப்பு ஒருபோதும் தமிழகத்தில் நிறைவேறாது. இது பெரியார் மண். வள்ளுவமும்-அம்பேத்கரின் கொள்கைகளும் வேறூன்றி கிடக்கும் மண்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story