2-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்: வேலூர் ஜெயிலில் உயிருக்கு ஆபத்து உள்ளதால் புழலுக்கு மாற்ற கோரிக்கை


2-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்: வேலூர் ஜெயிலில் உயிருக்கு ஆபத்து உள்ளதால் புழலுக்கு மாற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 12 Nov 2019 10:45 PM GMT (Updated: 12 Nov 2019 9:51 PM GMT)

வேலூர் ஜெயிலில் உயிருக்கு ஆபத்து உள்ளதால் புழல் ஜெயிலுக்கு மாற்றக்கோரி 2-வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் என்று அவருடைய வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி மத்திய பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 17-ந் தேதி முருகன் அறையில் இருந்து ஆன்ட்ராய்டு செல்போன், 2 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து அவர் தனிஅறைக்கு மாற்றப்பட்டு, ஜெயிலில் வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

தனி அறையில் இருந்து பழைய அறைக்கு மாற்றக்கோரியும், ஜெயில் சலுகைகளை மீண்டும் வழங்க வலியுறுத்தியும் முருகன் கடந்த மாதம் 18-ந் தேதி உண்ணாவிரதம் இருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி முருகனுக்கு ஆதரவாக அவருடைய மனைவி நளினியும் 26-ந் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

இருவரிடமும் ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முருகனின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பேரில் நளினி கடந்த 5-ந் தேதியும், முருகன் 7-ந் தேதியும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். அதைத்தொடர்ந்து 9-ந் தேதி நளினி-முருகன் சந்திப்பு நடந்தது.

அதன்பின்னர் முருகன் மீண்டும் தனிஅறையில் அடைக்கப்பட்டார். அந்த அறையில் இருந்து பழைய அறைக்கு மாற்றும்படி முருகன் ஜெயில் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதற்கு அவர்கள் அனுமதிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதனால் முருகன் தனிஅறையில் இருந்து பழைய அறைக்கு மாற்றக்கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபடபோவதாக ஜெயில் சூப்பிரண்டு ஆண்டாளிடம் மனு அளித்தார். தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் காலை முதல் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார். 2-வது நாளாக நேற்றும் முருகன் உண்ணாவிரதம் இருந்தார்.

முருகன் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பது குறித்து அவருடைய வக்கீல் புகழேந்தி கூறியதாவது:-

தனிஅறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை சிறை அதிகாரிகள் பழைய அறைக்கு மாற்றாமல் கொடுமைப்படுத்துகின்றனர். அதனால் அவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே மீண்டும் பழைய அறைக்கு மாற்ற வேண்டும். அல்லது புழல் ஜெயிலுக்கு மாற்றக்கோரி முருகன் ஜெயில் சூப்பிரண்டு ஆண்டாளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அவர் மனுவை உயர்அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாகவும், அவர்களின் உத்தரவின் பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதுவரை உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாக முருகன் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக சிறைத்துறை டி.ஐ.ஜி. மற்றும் சூப்பிரண்டு ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை.

Next Story