திட்டக்குடி அரசு பள்ளிக்கூடத்தில், குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த பாம்பு


திட்டக்குடி அரசு பள்ளிக்கூடத்தில், குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த பாம்பு
x
தினத்தந்தி 12 Nov 2019 10:45 PM GMT (Updated: 12 Nov 2019 10:41 PM GMT)

திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் பாம்பு இறந்து கிடந்தது. இந்த தண்ணீரை குடித்த 2 மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திட்டக்குடி,

திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களின் தாகம் தணிப்பதற்காக பள்ளிக்கூட வளாகத்தில் பழைய மற்றும் புதிய குடிநீர் தொட்டிகள் உள்ளன.

வழக்கம்போல் நேற்று மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். மதியம் சாப்பாடு முடிந்தவுடன் பள்ளி வாளகத்தில் உள்ள பழைய குடிநீர் தொட்டியில் மாணவர்கள் தண்ணீர் குடித்துள்ளனர். அப்போது குடிநீரில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த சில மாணவர்கள் குடிநீர் தொட்டியின் மேல்பகுதியை திறந்து பார்த்தபோது உள்ளே பாம்பு ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் பாம்பு இறந்து கிடந்த தண்ணீரை குடித்த 7-ம் வகுப்பு மாணவர்களான வதி‌‌ஷ்டபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் சிவன் (வயது 12), நிதிநத்தம் கிராமத்தை சேர்ந்த நாகராஜன் மகன் செல்லதுரை (12) ஆகியோர் திடீரென மயங்கி விழுந்தனர். உடனே அவர்களை பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் சில மாணவர்களுக்கு வாந்தி ஏற்பட்டது.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் கூறுறுகையில், குடிநீர் தொட்டி எப்போதும் மூடியேதான் இருக்கும். யாரோ வேண்டும் என்றே இறந்த பாம்பை குடிநீர் தொட்டிக்குள் போட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். இந்த சம்பவம் திட்டக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story