நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி: ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு, கடைகள் அகற்றம் - பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி: ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு, கடைகள் அகற்றம் - பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Nov 2019 10:45 PM GMT (Updated: 13 Nov 2019 12:25 AM GMT)

புதுச்சேரி - விழுப்புரம் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிக்காக சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடு, கடைகள் அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வில்லியனூர்,

புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பல இடங்களில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

அதன்படி வில்லியனூர் மூலக்கடை எம்.ஜி.ஆர்.சிலை பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வசித்து வந்த மாரிமுத்து என்பவரின் வீட்டை காலி செய்யுமாறு நெடுஞ்சாலைத்துறை கடந்த மாதம் அறிவித்து இருந்தது.. ஆனால் மாரிமுத்து குடும்பத்தினர் வீட்டை காலி செய்யாமல் தொடர்ந்து அங்கேயே வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை வில்லியனூர் தாசில்தார் மகாதேவன், துணை தாசில்தார் கஜேந்திரன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் அங்கு வந்தனர். வீட்டில் இருந்த மாரிமுத்துவின் குடும்பத்தினரை ஊழியர்கள் வெளியேற்றி, பொருட்களையும் அப்புறப்படுத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாரிமுத்துவின் மகள் செல்வி என்பவர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை கேனை எடுத்துக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். உடனே அங்கிருந்த வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் செல்வியின் கையில் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி, அவரிடம் சமரசம் செய்தனர்.

இதையடுத்து 2 பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் வீடு இடித்து அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கூடப்பாக்கம் சாலையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த தனியார் திருமண மண்டபத்தின் ஒரு பகுதி மற்றும் கடைகளும் அதிரடியாக அகற்றப்பட்டது.

இந்த பணியின்போது உதவி பொறியாளர் குப்பன், இளநிலை பொறியாளர் ராஜேஷ்குமார், கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் திருநாவுக்கரசு மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர். வில்லியனூரில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story