தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் இன்று பா.ஜனதாவில் இணைகிறார்கள் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தகவல்
தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் இன்று(வியாழக்கிழமை) பா.ஜனதாவில் இணைகிறார்கள் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் நேற்று கூறினார்.
பெங்களூரு,
தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் இன்று(வியாழக்கிழமை) பா.ஜனதாவில் இணைகிறார்கள் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் நேற்று கூறினார்.
எல்.சந்தோசுடன் சந்திப்பு
17 எம்.எல்.ஏ.க்கள் தங்களின் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அடுத்தமாதம்(டிசம்பர்) 5-ந் தேதி நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என கூறியுள்ளது.
இந்த தீர்ப்புக்கு பிறகு நேற்று டெல்லியில் இருந்த தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சிலர், துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயணுடன் சேர்ந்து பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எல்.சந்தோசை சந்தித்து பேசினர். அதன்பிறகு டெல்லியில் அஸ்வத் நாராயண் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இன்று பா.ஜனதாவில் இணைகிறார்கள்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பா.ஜனதாவில் இணைய விருப்பம் தெரிவித்து உள்ளனர். பா.ஜனதா கட்சிக்கு வரும் அவர்களை வரவேற்கிறோம். இதுதொடர்பாக அவர்கள் மூத்த தலைவர்களை சந்தித்து பேசியுள்ளனர். பா.ஜனதா கட்சியில் சேரும்படி அவர்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. அவர்கள் பா.ஜனதா கட்சியில் சேர விரும்பினர். அதன்படி கட்சியில் சேர உள்ளனர்.
நாளை(அதாவது இன்று) காலை 10.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-மந்திரி எடியூரப்பா, பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் ஆகியோர் முன்னிலையில் தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைய உள்ளனர். இடைத்தேர்தல் உள்ளிட்ட பிற விஷயங்கள் குறித்து பிறகு முடிவு செய்யப்படும். இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பது குறித்து எங்களது நண்பர்களுக்கு (தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள்) எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் முழு மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் பா.ஜனதாவில் இணைய உள்ளனர். அவர்களுக்கு சந்தேகம் இல்லாதபோது உங்களுக்கு (ஊடகம்) ஏன் அந்த சந்தேகம் வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story