வெற்றிடம் இல்லாவிட்டால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்கமாட்டார்: மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி பழிவாங்கும் நடவடிக்கை - சீமான் பேட்டி


வெற்றிடம் இல்லாவிட்டால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்கமாட்டார்: மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி பழிவாங்கும் நடவடிக்கை - சீமான் பேட்டி
x
தினத்தந்தி 14 Nov 2019 4:45 AM IST (Updated: 13 Nov 2019 11:17 PM IST)
t-max-icont-min-icon

வெற்றிடம் இல்லாவிட்டால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்கமாட்டார் எனவும், மராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி பழிவாங்கும் நடவடிக்கை என்றும் திருச்சியில் சீமான் தெரிவித்தார்.

திருச்சி, 

திருச்சி விமானநிலையத்தில் கடந்த 19-5-2018 அன்று நாம் தமிழர் கட்சியினர், ம.தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பிரபு உள்பட 14 பேர் மீது விமானநிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு திருச்சி 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சீமான் உள்பட 14 பேருக்கும் கடந்த 4-ந் தேதி குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையையொட்டி சீமான் உள்பட 14 பேரும் மாஜிஸ்திரேட்டு ஷகிலா முன்பு நேற்று ஆஜராகினர்.

அப்போது தகாத வார்த்தையால் திட்டுதல், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என மாஜிஸ்திரேட்டு கூறினார். இதற்கு சீமான் உள்ளிட்டோர் இந்த வழக்கு பொய்யானது எனக்கூறினர். இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை வருகிற ஜனவரி மாதம் 7-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு ஷகிலா தள்ளிவைத்தார். கோர்ட்டில் இருந்து வெளியேவந்த பின் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க கவர்னர் காத்திருந்தார். ஆனால் சிவசேனா, தேசியவாத காங்கிரசுக்கு போதுமான கால அவகாசம் கொடுக்காமல் ஜனாதிபதி ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரை செய்தது பழிவாங்கும் நடவடிக்கையாகும். இது பா.ஜ.க.வின் திட்டமிட்ட செயல்.

உள்ளாட்சி தேர்தலை எப்போது அறிவித்தாலும் போட்டியிடுவோம். நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். இந்த நிலைப்பாட்டில் இருந்து மாறுவதில்லை. ஆவின் பால் பாக்கெட்டில் திருக்குறள் இடம்பெற செய்ய போவதாக கூறியிருப்பது வரவேற்க கூடியது தான். ஆனால் வாங்குபவர்கள் அதனை படிப்பார்களா? என்பது சந்தேகம்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அமெரிக்காவில் விருது கொடுத்து பாராட்டுவது நமக்கு பெருமை தான். அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு, சிவாஜிகணேசனின் நிலை தான் ஏற்படும் என ஒப்பிட்டு கூறக்கூடாது. ரஜினிகாந்த் தன்னுடைய நிலைப்பாட்டில் எப்போதும் நிலையாக இருக்க முடியாது. அரை மணி நேரத்தில் நிலைப்பாட்டை மாற்றக்கூடியவர். அரசியலில் வெற்றிடம் இருப்பதனால், ரஜினிகாந்த் வருவதாக கூறியிருக்கிறார். வெற்றிடம் இல்லையென்றால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்க மாட்டார். ஆளுமையை பற்றி ரஜினிகாந்த் பேசக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story