மண்டபம் யூனியன் ஆற்றாங்கரை கிராமத்தில், வைகை தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் அவலம் - தடுப்பணை கட்ட கோரிக்கை


மண்டபம் யூனியன் ஆற்றாங்கரை கிராமத்தில், வைகை தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் அவலம் - தடுப்பணை கட்ட கோரிக்கை
x
தினத்தந்தி 13 Nov 2019 10:45 PM GMT (Updated: 13 Nov 2019 5:50 PM GMT)

மண்டபம் யூனியன் ஆற்றாங்கரை கிராமத்தில் வைகை தண்ணீர் வீணாக கடலில் கலந்துவருவதை தடு்க்க, தடுப்பணை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பனைக்குளம்,

மண்டபம் யூனியனுக்கு உட்பட்டது ஆற்றாங்கரை கிராமம். இங்கு வைகை ஆறும் வங்கக்கடலும் சங்கமிக்கும் முகத்துவாரம் அமைந்துள்ளது. பரமக்குடி வரையிலும் வைகை ஆறாக வரும் தண்ணீர், அங்கிருந்து வெட்டாறு என்று அழைக்கப்படும் பெரிய கண்மாய் மூலமாக தேர்போகி, அத்தியூத்து வழியாக அழகன் குளம்-பனைக்குளம் கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ள நதிப்பாலத்தை கடந்து பெருங்குளம் மற்றும் ஆற்றாங்கரை முகத்துவாரம் வழியாக வங்கக்கடலுடன் கலக்கிறது.

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் திறந்து விடப்படும் தண்ணீர் இந்த வழியாக கடலில் கலந்து வீணாவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆற்றாங்கரை பகுதியில் கடற்கரைக்கும், வைகை ஆற்றின் முகத்துவாரத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் மணல் குன்றுகள் அமைந்துள்ளன.

பருவக்காற்று வீசும் காலங்களில் இந்த மணல் குன்றுகளால் முகத்துவாரம் பகுதி முழுவதும் மேடாகி போய்விடுகிறது. இதையடுத்து மழைக்காலங்களில் வைகை தண்ணீர் பெருக்கெடுத்து வரும் போது மணல்கள் கடலுக்குள் அடித்துச்செல்லப்படுகிறது.

இதனால் கடல் ஆழமின்றி போனதால் நாட்டுப்படகுகள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. இதுதவிர கடல் சீற்றத்தின் போது படகுகளை நிறுத்துவதற்கும் மீனவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதையடுத்து இப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றாங்கரை முகத்துவாரம் பகுதியில் தடுப்பணை கட்டினால் வைகை தண்ணீர் கடலில் கலந்து வீணாவது தடுக்கப்படும் என்றும், ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள தேர்போகி, அத்தியூத்து, பனைக்குளம், கழுகூரணி, குயவன்குடி, வாலாந்தரவை, வழுதூர், பெருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

இங்கு தடுப்பணை அமைப்பது தொடர்பாக அப்போதைய மாவட்ட கலெக்டர் விஜயகுமார் மற்றும் அதற்கு அடுத்து வந்த கலெக்டர்களிடமும், முன்னாள் எம்.பி. அன்வர்ராஜாவிடமும் தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பயனாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆற்றாங்கரை பகுதியில் கடலும், வைகை ஆறும் சங்கமிக்கும் பகுதியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டதுடன் அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.

இதுகுறித்து ஆற்றாங்கரை பகுதியை சேர்ந்த மீனவர் சங்க பிரதிநிதி கூறியதாவது:- வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது திறந்து விடப்படும் தண்ணீர் நேராக ஆற்றாங்கரைக்கு வந்து கடலில் கலந்து வீணாகிறது.

ஆற்றில் தண்ணீர் வருவதில்லை. இப்பகுதியில் குடிநீர் பிரச்சினையும் தீர்ந்தபாடில்லை. எனவே கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்கும் வகையில் இங்கு தடுப்பணை அமைத்தால் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஏராளமான மீனவர்களுக்கும் வாழ்வாதாரம் கிடைக்கும்.

தமிழக அரசு ஒதுக்கி உள்ள நிதி போதுமானதாக இருக்காது. எனவே அரசு இதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மழைக்காலம் முடிந்த பின்னர் மார்ச் மாதத்திற்கு பிறகு தடுப்பணை கட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story