கால்நடை சிகிச்சைக்காக அவசர ஆம்புலன்ஸ் சேவை - அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்


கால்நடை சிகிச்சைக்காக அவசர ஆம்புலன்ஸ் சேவை - அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Nov 2019 10:00 PM GMT (Updated: 13 Nov 2019 5:54 PM GMT)

கால்நடை சிகிச்சைக்கான அம்மா அவசர சிகிச்சை ஆம்புலன்சை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை,

சிவகங்கையில்,கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கால்நடை சிகிச்சைக்கான அம்மா அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் ேசவை தொடக்க விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் பாஸ்கரன் கால்நடை சிகிச்சைக்காக அம்மா அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவை வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிராமப்பகுதிகளில் கால் நடைகள் எந்தவித பாதிப்பின்றி நன்றாக பராமரித்து வளர்ப்பதற்கு ஏதுவாக கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் புதிதாக கால்நடை அம்மா அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற வேண்டிய கால்நடைகளை இந்த வாகனம் மூலமாக எடுத்து வந்து கால்நடை மருந்தகத்தில் சிகிச்சை பெறுவதற்கு ஏற்ப கால்நடைகளை தூக்க பெல்ட்டுடன் கூடிய லிப்ட் வசதி உள்ளது. இதனால் கால்நடைகளை எளிதாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல இந்த வாகனம் மிகப்பயனுள்ளதாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் இந்த சேவை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். பொதுவாக கிராமப் பகுதிகளில் கால்நடை வளர்ப்போருக்கு இந்த சேவை மிகமிக பயனுள்ளதாக இருக்கும்.

இந்த வாகனத்தில் ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஒரு உதவியாளர் இருப்பார்கள். மேலும் அவசர சிகிச்சை உபகரணங்கள், மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து திரவங்கள் தயார் நிலையில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கறவை மாடு வளர்ப்பவர்கள் மற்றும் தீவனப்பயிர் வளர்ப்பவர்களுக்கு 75 சதவீத மானியத்தில் புல்வெட்டு கருவி மற்றும் தீவனப்பயிர் வளர்ப்பதற்கு 100 சதவீத மானியத்தில் சோளம், தட்டை, முயல் மசால், குதிரை மசால் மற்றும் கோ.29 வகை சோளம் ஆகியவற்றின் விதைகளை அமைச்சர் வழங்கினார்

நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் முருகேசன், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சுத்துறை சங்கத்தலைவர் சசிக்குமார், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் ராஜா, பலராமன், மோகன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story