மாவட்ட செய்திகள்

சமயபுரம் அருகே வனப்பகுதியில் சொகுசு காருடன் தொழிலதிபர் எரித்துக்கொலை + "||" + Businessman burnt to death with luxury car in forest area near Samayapuram

சமயபுரம் அருகே வனப்பகுதியில் சொகுசு காருடன் தொழிலதிபர் எரித்துக்கொலை

சமயபுரம் அருகே வனப்பகுதியில் சொகுசு காருடன் தொழிலதிபர் எரித்துக்கொலை
சமயபுரம் அருகே வனப்பகுதியில் சொகுசு காருடன் தொழிலதிபரை எரித்துக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
சமயபுரம், 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூர் மெயின் ரோட்டில் இருந்து லால்குடி செல்லும் வழியில் தச்சன்குறிச்சி உள்ளது. அடர்ந்த வனப்பகுதியான இங்கு ஆட்கள் நடமாட்டம் இருக்காது. இந்தநிலையில் இந்த வனப்பகுதியில் ஒரு கார் எரிந்த நிலையில் நிற்பதாக சிறுகனூர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, அந்த கார் விலை உயர்ந்த சொகுசு கார் என்பதும், காருக்குள் டிரைவர் இருக்கைக்கு அருகே உள்ள இருக்கையில் ஒரு ஆண் சாய்ந்த நிலையில் முற்றிலும் எரிந்து பிணமாக கிடந்தார்.

இதனால் அவரை யாரோ உயிருடன் காரில் வைத்து எரித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். ஆனால் அவருடைய உடல் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக கிடந்தது. இதன்காரணமாக அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

அந்த காரின் ‘நம்பர் பிளேட்’ முற்றிலும் எரிந்து இருந்ததால், அதன் பதிவு எண்ணும் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அந்த காரின் ‘என்ஜின்’ எண் மற்றும் ‘சேஸ்’ எண்ணை வைத்து அந்த சொகுசு கார் யாருடையது என்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அந்த சொகுசு கார் திருச்சி காட்டூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஜாகீர்உசேன் (வயது 51) என்பவருக்கு சொந்தமானது என்பதும், அவர் கார்களை வாங்கி, விற்கும் நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்தது. உடனே போலீசார் காட்டூருக்கு சென்று ஜாகீர்உசேனின் மகன் அன்சார் உசேனை (22) சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர், அந்த கார் தனது தந்தையுடையது தான் என்றும், காரில் எரிந்த நிலையில் இருப்பது தனது தந்தை தான் என்றும் உறுதி செய்தார். இதைத்தொடர்ந்து ஜாகீர் உசேனின் எரிந்த உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

மேலும் சம்பவ இடத்துக்கு திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் ஆகியோர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அது கார் எரிந்து கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் சென்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

மேலும் தடயவியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு, அங்கு கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே இந்த கொலை சம்பவம் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் ஏராளமான பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் அங்கு திரண்டனர். ஆனால் சம்பவம் நடந்த இடம் அருகே பத்திரிகையாளர்கள் உள்பட யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மதன்(சமயபுரம்), இம்மானுவேல் ராயப்பன் (மண்ணச்சநல்லூர்) ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். ஜாகீர் உசேன், சொகுசு காரில் தானாக வந்தாரா? அல்லது அவரை யாராவது கடத்தி வந்தார்களா? என்று தெரியவில்லை.

அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? பணத்துக்காகவா? அல்லது தொழில்போட்டியா? அல்லது வேறு காரணமா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அது தெரிந்தால் தான், அவரை எரித்துக்கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்று தெரியவரும் என்று போலீசார் கூறினார்கள். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜாகீர்உசேனை கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...